ஆபத்தின் விளிம்பில் ஐரோப்பா நாடுகள் - உக்ரைனில் அட்டகாசம் செய்யும் ரஷ்யா
உக்ரைன் நாட்டில் ரஷ்யாவின் தொடர் ஏவுகணை தாக்குதல்களால் மிகப்பெரிய ஆபத்து ஒன்று காத்து இருப்பதாக உக்ரைன் நாட்டு வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.
சோவியத் யூனியனில் அங்கம் வகித்த உக்ரைன், தற்போது நேட்டோ கூட்டமைப்புடன் சேர்வதற்கான அனைத்து பணிகளையும் செய்து வருகிறது. இதனால் தங்கள் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படலாம் என கூறி ரஷ்யா உக்ரைன் மீது போர் தொடுத்துள்ளது.
நேற்று முதல் தரைவழி, வான்வெளி மூலம் உக்ரைன் தலைநகர் உள்பட நகரின் பல்வேறு பகுதிகளில் ரஷ்ய பாதுகாப்பு படையினர் குண்டுமழை பொழிந்து வருகின்றனர். குறிப்பாக அந்நாட்டு பாதுகாப்பு துறை தளவாடங்களை குறி வைத்து ரஷ்யா தாக்கி வருகிறது.
இதுவரை 100 பேர் பலியாகி இருக்கலாம் என்று அஞ்சப்படும் நிலையில் உக்ரைனுக்கு மிகப்பெரிய ஆபத்து ஒன்று காத்து இருப்பதாக உக்ரைன் நாட்டு வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.
அதாவது உக்ரைன் நாடு தங்களின் மின்சார தேவைக்கு அதிக அளவில் அணு உலைகளை நம்பித்தான் இருக்கிறது. அங்கு மொத்தம் 15 அணு மின் நிலைய உலைகள் உள்ளது. கேல்நிட்ஸ்கி, ரிவின், தென்மேற்கு, சசபோரியா, தெற்கு உக்ரைன் ஆகிய பகுதிகளில் இந்த அணு உலைகள் உள்ளது.

உக்ரைனின் செர்னோபில் அணுமின் நிலையம் ரஷ்யப் படைகளால் கைப்பற்றப்பட்டதாக உக்ரைன் அதிபர் அலுவலகத்தின் ஆலோசகர் மைக்கைலோ பொடோலியாக் தெரிவித்துள்ளார். வரும் நாட்களில் மொத்த இடத்தையும் ரஷ்யா கைப்பற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதில் உக்ரைன் தலைநகர் கியேவில் (Kyiv) இருந்து வடக்கே 60 மைல் தொலைவில் அமைந்துள்ள ஏற்கனவே வெடித்த செர்னோபில் அணு உலை பகுதியை ரஷ்யப் படைகள் கைப்பற்றியுள்ளனர். பொதுவாக அணு உலைகளை போரின் போது எந்த நாடும் தாக்காது என்றாலும் ரஷ்யாவால் ஏவப்படும் ஏவுகணை தப்பித்தவறி இங்கு தாக்கினால் அது பெரிய பாதிப்பை ஏற்படுத்தும்.
ஏவுகணையால் ஒரு தாக்குதல் தவறி நடந்தால் அது உலக அளவில் சுற்றுசூழல் பாதிப்பை ஏற்படுத்தும். அதோடு புகுஷிமா, செர்னோபில் ஆகியவற்றை விட மோசமான பாதிப்புகளை இது ஏற்படுத்தும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.