புனீத்தை தொடர்ந்து மரணமடைந்த இளம் வயது நடிகர் - சோகத்தில் ரசிகர்கள்
மிர்சாபூர் வெப் தொடரில் 'லலித்' கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமான நடிகர் மர்மமான முறையில் உயிரிழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அமேஸான் ப்ரைம் ஓடிடி தளத்தில் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்ற வெப் சீரிஸ் ‘மிர்சாபூர்’. இந்த வெப் சீரிஸில் லலித் என்கிற கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர் பிரம்மா ஸ்வரூப் மிஸ்ரா. இவர் மும்பையில் வசித்து வந்தார்.
36 வயதான பிரம்மா மிஸ்ராவுக்கு கடந்த நவம்பர் 29ஆம் தேதி நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்றுள்ளார்.
இந்நிலையில் பிரம்மா மிஸ்ராவின் வீட்டில் இருந்து ஏதோ துர்நாற்றம் வருவதாக அக்கம்பக்கத்தினர் நேற்று போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். போலீசார் வந்து வீட்டின் கதவை உடைத்து பாத்ரூமுக்கு சென்று பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.
அங்கு பிரம்மா மிஸ்ராவின் உடல் அழுகிய நிலையில் கிடந்தது. அவரது உடலைக் கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.பிரம்மா மிஸ்ரா மாரடைப்பால் மரணம் அடைந்திருக்கக்கூடும் என முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. பிரம்மா தற்கொலை செய்துகொள்ளவில்லை என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.
அண்மையில், பாலிவுட் நடிகர் சித்தார்த் சுக்லா (40) மாரடைப்பால் இறந்த நிலையில், கன்னட சூப்பர் ஸ்டார் புனித்குமாரும் (40) மாரடைப்பால் உயிரிழந்தார். அதே போல இயக்குநர் ராஜ் கெளசலும் தனது 50 வயதில் மாரடைப்பால் உயிரிழந்தார். இப்படி பிரபலங்கள் பலர் தொடர்ந்து மாரடைப்பால் இறந்து வருவது திரை உலகில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
மாரடைப்பால் அதிகரிக்கும் இந்த இளம் வயது உயிரிழப்புகள் நாளுக்கு நாள் அதிகரிக்கும் மோசமான வாழ்க்கை முறையாலும், உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை வியாதி உள்ளிட்டவை குறித்து முறையான புரிதல் இல்லாத காரணத்தினாலும் ஏற்படுவதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.