முதல்வரையே மிரட்டிய அமைச்சர் - ஒரே இரவில் ஜாமீனில் வெளிவந்தார்
கடந்த சுதந்திர தினத்தின் போது உரையாற்றிய முதலமைச்சர் உத்தவ் தாக்கரே இந்தியா சுதந்திரம் அடைந்த ஆண்டைதவறுதலாக கூறினார்.
இது சமூக வலைதளங்களில் விமர்சனங்களை எழுப்பிய நிலையில் மத்திய சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் துறை அமைச்சர் நாராயண ரானே சுதந்திரம் பெற்ற ஆண்டு கூட ஒரு முதலமைச்சருக்கு தெரியவில்லை.

அவர் உரையாற்றிய இடத்தில் நான் இருந்திருந்தால் தாக்கரேவின் கன்னத்தில் அறை கொடுத்திருப்பேன் என்றார். இதனால் மகாராஷ்டிராவில் பாஜக மற்றும் சிவசேனா தொண்டர்கள் இடையே மோதல் ஏற்பட்டது.
இதனால் பதட்டமான சூழல் ஏற்பட்டது. மாநிலம் முழுவதும் கலவரத்தில் ஈடுபட்டவர்கள் மீது வழக்குபதிவு செய்யப்பட்டு. இருதரப்பினருக்கு இடையே மோதலை ஏற்படுத்தியதற்காக மத்திய அமைச்சர் நாராயண் ரானே ரத்னகிரி காவல் துறையினரால் நேற்று அதிரடியாக கைது செய்யப்பட்டார்.
இதை தொடர்ந்து மும்பையிலிருந்து 165 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள மகாத் என்ற இடத்தில் நீதிபதி முன்பு ஆஜர்படுத்தப்பட்ட அவரை விசாரணை நடத்த போலீசார் அனுமதி கேட்ட நிலையில் மறுப்பு தெரிவித்த நீதிபதி அவருக்கு ஜாமீன் வழங்கினார்.

இதனால் அவர் நள்ளிரவில் விடுவிக்கப்பட்டார்.பாஜக தலைவர் ஜெ.பி.நட்டா , மத்திய அமைச்சரை கைது செய்தது என்பது அரசியலைமைப்பு சட்டத்தை மீறிய செயல் என்று கண்டனம் தெரிவித்துள்ள நிலையில் வாய்மையே வெல்லும் என நாராயண் ரானே தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.