புஷ்பா படத்தைப் பார்த்து கொலை சம்பவத்தில் ஈடுபட்ட சிறுவர்கள் - அதிர்ச்சியில் பொதுமக்கள்

alluarjun murdercase புஷ்பா pushpatherise pushpatherule
By Petchi Avudaiappan Jan 21, 2022 09:39 PM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in சினிமா
Report

நடிகர் அல்லு அர்ஜூனின் புஷ்பா படம் பார்த்த சிறுவர்கள் அதில் வருவதைப் போல கொலை சம்பவம் செய்து போலீசாரிடம் சிக்கியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜூன், ராஷ்மிகா மந்தனா நடிப்பில் கடந்த மாதம் வெளியாகி தியேட்டர்களில் வசூல் சாதனை செய்த படம் “புஷ்பா”. செம்மரம் கடத்தை அடிப்படையாக கொண்ட இந்த கேங்ஸ்டர் படத்தில் நடிகை சமந்தா ஒரு பாடலுக்கு நடனமாடி இருந்தார். 

இதனிடையே படத்தில் இடம்பெறும் கொலை சம்பவம் ஒன்றை நிஜத்தில் 3 சிறுவர்கள் நடத்தியுள்ள சம்பவம் பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் அந்த சம்பவத்தை வீடியோவாக எடுத்து அதனை சமூக வலைத்தளத்தில் பதிவேற்றி புகழ் பெறவும் சிறுவர்கள் திட்டமிட்டது விசாரணையில் தெரியவந்தது.

டெல்லியின் ஜஹாங்கிர்புரி பகுதியைச் சேர்ந்த 24 வயதான  சிபு என்ற இளைஞர் அதே பகுதியில் உள்ள கடை ஒன்றில் வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த ஜனவரி 19 ஆம் தேதி இரவு பணி முடிந்து வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்த சிபுவை வழிமறித்த மூன்று சிறுவர்கள் தாங்கள் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து சரமாரியாக வெட்டியுள்ளனர். மேலும் சிபு கத்தியால் வெட்டப்படுவதை ஒரு சிறுவன் வீடியோ எடுத்துள்ளான்.

இதில் படுகாயமடைந்து உயிருக்கு போராடிய சிபுவை மீட்டு அப்பகுதி மக்கள் மருத்துவமனையில் சேர்த்த நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். டெல்லி காவல்துறையினர் சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்த போது சிபு வெட்டப்படுவதை சிறுவன் ஒருவன் வீடியோ எடுக்கும் காட்சி பதிவாகி இருப்பதை பார்த்து அதனடிப்படையில் அவர்களை தேடி வந்தனர். இந்நிலையில் நேற்று மூன்று சிறுவர்களும் கைது செய்யப்பட்டனர்.

அவர்களிடம் நடத்திய விசாரணையில் சமீபத்தில் வெளியான புஷ்பா, Bhaukaal போன்ற கேங்ஸ்டர் படங்களை பார்த்த சிறுவர்கள் திரைப்படத்தில் வருவதைப் போல கொலை செய்து அதனை சமூக வலைத்தளத்தில் வெளியிட திட்டமிட்டிருந்தது தெரிய வந்தது.