8-ம் வகுப்பு மாணவிகள் திடீர் மாயம் - BTS-ஐ காண ரயில் ஏறி கொரியா புறப்பட்ட அதிர்ச்சி சம்பவம்!
கொரியாவில் நடக்கும் டான்ஸ் நிகழ்ச்சியைப் பார்க்க புறப்பட்ட 3 அரசு பள்ளி மாணவிகளை போலீசார் மீட்டுள்ளனர்.
மாணவிகள் மாயம்
கரூர் மாவட்டத்தில் அரசு பள்ளி ஒன்றில் 8-ம் வகுப்பு படித்து வரும் 3 மாணவிகள் வழக்கம்போல் பள்ளி சென்றுள்ளனர். ஆனால் அவர்கள் பள்ளிக்கு செல்லாமல், மூன்று மாணவிகளும் ஒன்றுகூடி மாயமானார்கள்.
இது தொடர்பாக காவல் நிலையத்தில் அவர்களின் பெற்றோர்கள் புகார் அளித்தனர். இதையடுத்து காணாமல் போன 3 மாணவிகளையும் தனிப்படை அமைத்து போலீசார் தேடி வந்தனர். இந்நிலையில் மாணவிகள் மூவரையும் காட்பாடி ரயில் நிலையத்தில் வைத்து ரயில்வே போலீஸார் மடக்கி பிடித்தனர்.
பின்னர் அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், கரூர் ரயில் நிலையத்திலிருந்து ஈரோடு ஜங்ஷன் சென்று, அங்கிருந்து சென்னை வந்ததாக கூறியுள்ளனர்.
பத்திரமாக மீட்பு
மேலும், புகழ்பெற்ற கே பாப் ஐடல் (கொரியன்) (BTS) டான்ஸ் நிகழ்ச்சியைப் பார்த்து, அந்த நிகழ்ச்சியைக் காண கொரியா செல்வதற்காக, தாங்கள் மூவரும் புறப்பட்டு வந்ததாக கூறியுள்ளனர்.
இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த காட்பாடி ரயில்வே போலீஸார், மூன்று மாணவிகளையும் கரூர் போலீசாரிடம் ஒப்படைத்தனர். மேலும், சமூக வலைத்தளத்தில் வரும் இது போன்ற நிகழ்ச்சிகளை பார்க்கும் குழந்தைகளின் மனநிலை பாதிக்கப்படுகிறது. இதனால், அவர்கள் தவறான முடிவை எடுக்கிறார்கள்' என்று போலீஸார் தெரிவித்துள்ளனர்.