ரேசன் அட்டைகளுக்கு ரூ. 2000 வழங்கும் திட்டம் - தமிழகம் முழுவதும் இன்று தொடக்கம்
தமிழகம் முழுவதும் ரேசன் அட்டை உள்ள குடும்பங்களுக்கு ரூ. 4000 வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்திருந்தது. அதன் ஒரு தவனையாக ரூ. 2000 இந்த மாதத்திலிருந்தே வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன் படி இன்று தமிழகம் முழுவதும் அந்த திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது.
பழனியில் குடும்ப அட்டைதாரர்களுக்கு கொரோனா சிறப்பு நிவாரண நிதிவழங்கும் திட்டத்தை பழனி சட்டமன்ற உறுப்பினர் ஐ.பி.செந்தில்குமார் துவக்கிவைத்தார்.
விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் பகுதியில் கொரோணா சிறப்பு நிவாரண நிதி அரிசி குடும்ப அட்டை தாரர்களுக்கு ரூபாய் 2000 வழங்கும் திட்டத்தை திமுக சட்டமன்ற உறுப்பினர் தங்கபாண்டியன் துவக்கிவைத்தார். உடன் வட்டாச்சியர் பொருப்பு ரங்கநாதன் வட்ட வழங்கல் அலுவலர் பாஸ்கரன், உள்ளிட்ட அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
துறைமுகம் பகுதியில் வசிக்கும் குடும்ப அட்டைதாரர்களுக்கு கொரோனா நிவாரண நிதி வழங்கிடும் நிகழ்ச்சியில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் திரு சேகர்பாபு, நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் ஆகியோர் பங்கேற்றனர்.
மயிலாடுதுறை மாவட்டத்தில் 2 லட்சத்து 68 ஆயிரத்து 945 அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு கொரோனா சிறப்பு நிவாரணநிதி வழங்கும் திட்டத்தை மாவட்ட ஆட்சியர் மற்றும் பூம்புகார் தொகுதி எம்எல்ஏ நிவேதா முருகன் ஆகியோர் பயனாளிகளுக்கு வழங்கி தொடங்கி வைத்தனர்.
அருப்புக்கோட்டையில் குடும்ப அட்டைதாரர்களுக்கு சிறப்பு நிவாரணமாக ரூபாய் 2000 வழங்கும் திட்டத்தை தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் அவர்கள் தொடங்கி வைத்தார்
கடலூர் மாவட்டத்தில் கொரோனா நிவாரணமாக முதற்கட்டமாக 147.49 கோடி ஒதுக்கீடு குடும்ப அட்டைகளுக்கு 2000 வேளாண்மை உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் துவக்கிவைத்தார்.