தேர்தலில் வென்றால் அமைச்சர் ஆவேனா? உதயநிதி ஸ்டாலின் பதில்
தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6-ம் தேதி நடைபெற உள்ளது. இதனால் அரசியல் கட்சிகள் மிகத் தீவிரமான பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. திமுக மற்றும் கூட்டணி கட்சிகளுக்கு ஆதரவாக உதயநிதி ஸ்டாலினும் பிரச்சாரம் செய்து வருகிறார். இந்தத் தேர்தலில் முதல் முறையாக சேப்பாக்கம் தொகுதியில் போட்டியிடுகிறார்.
கருணாநிதி முதல்வராக இருந்தபோது போட்டியிட்ட தொகுதி சேப்பாக்கம். உதயநிதி சமீபத்தில் அளித்துள்ள பேட்டியில், ”தொண்டர்கள் தான் நான் சேப்பாக்கம் தொகுதியில் போட்டியிட வேண்டும் என்று விரும்பினார்கள். நான் தமிழ்நாடு முழுவதும் பிரச்சாரம் மேற்கொள்கிறேன் என்று தான் தலைவரிடம் சொன்னேன். தலைவர், பொதுச்செயலாளர், பொருளாளர் உள்ளிட்ட மூத்த தலைவர்கள் விருப்பபட்டதாலும், தொகுதி தொண்டர்களும் நிர்வாகிகளும் பொறுப்பேற்றுக் கொண்டதால் தான் போட்டியிடுகிறேன்.
தமிழ்நாடு முழுவதும் பிரச்சாரம் செய்ய வேண்டும் என்பது தான் என்னுடைய விருப்பம். மக்கள் தேர்ந்தெடுத்தால் தான் தேர்தலில் வெற்றி பெற முடியும். நான் வெற்றி பெற்று என்னுடைய தொகுதி மக்களுக்கு எப்படிப் பணியாற்றுகிறேன் என்று பார்த்து விட்டுச் சொல்லுங்கள்” என்றார் உதயநிதி. அமைச்சர் பொறுப்பு கொடுத்தால் ஏற்றுக் கொள்வீர்களா என்ற கேள்விக்கு, நான் செய்ய வேண்டிய பணிகள் ஏராளம் இருக்கிறது.
அமைச்சர் பொறுப்பை நான் மறுப்பேன். தலைவரும் மற்ற மூத்த தலைவர்களும் வலியுறுத்தினால் அவர்களின் முடிவை ஏற்றுக் கொள்வேன் என்று கூறியுள்ளார் உதயநிதி.
செல்லுமிடங்களில் எல்லாம் கலைஞரின் பேரன் என்பதாலேயே என்னை ஆரத்தழுவி அன்பைப் பொழிகிறார்கள். கலைஞரால் அத்தனை பயன்பெற்றவர்கள் அவர் மீது கொண்ட அன்பை என்னிடம் காட்டுகிறார்கள், எல்லாப் புகழும் கலைஞருக்கே என்றும் தாத்தாவைப் பற்றி பெருமிதம் பொங்க கூறினார்.