ஒரே போன் கால்.. வீடு தேடி மருத்துவம், குவிந்த நிவாரண பொருட்கள் - அமைச்சர் உதயநிதி அதிரடி!
அமைச்சர் உதயநிதி ஸ்டாலினிடம் போனில் சொன்னதுமே, நிவாரண பணிகள் உடனடியாக நடைபெற்றதாக மனித உரிமை செயற்பாட்டாளர் தேவநேயன் அரசு தெரிவித்துள்ளார்.
புயல் பாதிப்பு
மிக்ஜாம் புயலால் பெய்த கனமழை காரணமாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் பல்வேறு பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ளது.
குடியிருப்புப் பகுதிகளுக்குள் வெள்ளம் புகுந்ததால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும், மழை வெள்ளத்தால் செம்மஞ்சேரி, பெரும்பாக்கம் பகுதிகளில் ஏராளமானோர் கடும் பாதிப்புக்கு உள்ளாகினர். இதற்காக தமிழக அரசு தொடர்ந்து மீட்புப்பணிகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் மனித உரிமைகள் செயற்பாட்டாளர் தேவநேயன் அரசுவை போனில் தொடர்பு கொண்ட அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வெள்ள பாதிப்புகளை குறித்து கேட்டறிந்து, பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளையும் வழங்கியுள்ளார்.
இது தொடர்பாக மனித உரிமை செயற்பாட்டாளர் தேவநேயன் அரசு வெளியிட்டுள்ள ஃபேஸ்புக் பதிவில் "வணக்கம்.. கடந்த 8ம் தேதி விளையாட்டுத்துறை மற்றும் சிறப்புப்பணிகள் துறை அமைச்சர் மாண்புமிகு உதயநிதி ஸ்டாலின் அவர்கள் செம்மஞ்சேரி மற்றும் பெரும்பாக்கம் குடியிருப்பு பகுதிகளின் வெள்ள பாதிப்புகளை பற்றி விரிவாக என்னிடம் தொலைப்பேசி வழியாக கேட்டறிந்தார்.
அமைச்சர் உதயநிதி
உடனடியாக என்னென்ன செய்ய வேண்டும் என்பதை விரிவாகக்கூறினேன். இடமாற்றம் செய்யப்பட்ட பகுதிகளில் ஒவ்வொரு பகுதிக்கும் ஒரு சிறப்பு அலுவலர் உடனே நியமிக்க வேண்டும் என்றேன். அன்று மாலையே அதற்கான சிறப்பு அலுவலர் நியமிக்கப்பட்டார்.
மருத்துவ முகாம்கள் வீடு தேடி செல்ல வேண்டும் என்றும் வேண்டுகோள் வைத்தேன். 10ம் தேதி முதல் அது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் அனைத்து குடும்பங்களுக்கும் நிவாரண பொருட்களை வழங்க வேண்டும் என்று வேண்டுகோள் வைத்தேன். அதேபோல 6000 மேற்பட்ட குடும்பங்களுக்கான நிவாரணப் பொருட்கள் அவரின் கட்சி சார்பாக வழங்குவதற்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளது.
மேலும் குழந்தைகள், பெண்கள் மற்றும் முதியோர்களுக்கு பல்வேறு சிறப்பு முயற்சிகளை உடனே எடுக்க வேண்டும் என்று கூறியிருந்ததன் அடிப்படையில் நாளை முதல் அதை தொடங்க உள்ளார்கள் என்பதையும் அறிந்தேன். இந்த எளியோன் வைத்த வேண்டுகோள்களை உடனடியாக செயல்படுத்திக் கொண்டும் மற்றும் தொடர்ந்து கண்காணித்துக் கொண்டிருக்கும் மாண்புமிகு அமைச்சர் அவர்களுக்கு நெஞ்சம் நிறைந்த நன்றிகளை செம்மஞ்சேரி குடியிருப்புப் பகுதி மக்கள் சார்பாகவும், சமூக அமைப்புகளின் சார்பாகவும் தெரிவித்துக் கொள்கிறேன்" என குறிப்பிட்டுள்ளார்.