அனிதாவை சித்தரித்து வெளியிட்ட வீடியோவால் சிக்கலில் சிக்கிய அமைச்சர்!
அனிதாவை சித்தரித்து வெளியிட்ட வீடியோவால் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் சர்ச்சையில் சிக்கியிருக்கிறார். தமிழகத்தில் சட்டமன்ற பொதுத் தேர்தல் வருகிற 6ம் தேதி நடைபெற இருக்கிறது. இதனால் அனைத்து கட்சிகளும் தீவிர சூறாவளி பிரச்சாரம் செய்து வருகிறது. குறிப்பாக திமுகவிற்கும், அதிமுகவிற்கும் கடும் போட்டி நடைபெற்று வருகிறது.
இதனால், தேர்தல் களத்தில் ஆளும்கட்சியும், எதிர்க்கட்சியும் மாறி மாறி குறை சொல்லி விமர்சித்து வருகிறார்கள். ஆனால், இந்த முறை கட்சிகளின் பிரச்சார பேச்சுக்கள் அனைத்தும் எல்லை மீறி சென்றுள்ளது. அதாவது, அரசியல் கட்சிகளின் தலைவர்களின் பெயரையே குறிப்பிட்டு அவர்கள் செய்த தவறுகளை குறை கூறி, தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பப்பட்டது மக்களின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

இதனையடுத்து, நீட் தேர்வால் உயிரிழந்த மாணவி அனிதா பேசியது போன்ற ஒரு வீடியோவை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தனது சமூகவலைத்தளத்தில் பதிவிட்டு வெளியிட்டிருந்தார். அதில்,
என்கூட 17 பேரின் வாழ்க்கையை நாசமாக்கின திமுகவ மன்னிச்சிடாதீங்க. சூரியன் உதிக்கிறது என்னமாதிரி 17 பேருக்கு அஸ்தமனம் ஆகிடிச்சு. உங்க கையில இருக்கிற விரல் மை எங்கள் வாழ்க்கை" என்று பதிவிட்டிருந்தார். அமைச்சர் பாண்டிய ராஜனின் இந்த பதிவிற்குக் கண்டனங்கள் தற்போது எழுந்துள்ளது.

இதனையடுத்து அனிதாவின் அண்ணன் மணிரத்னம் அமைச்சருக்கு எதிர்ப்பும், கண்டனத்தையும் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அனிதா அண்ணன் பேசுகையில், உங்கள் மகள் இறந்திருந்தால் அவரை பயன்படுத்தி இப்படித் தான் வீடியோ வெளியிடுவீர்களா? என அமைச்சர் பாண்டியராஜனுக்கு கண்டனத்தை தெரிவித்தார். இந்த விவகாரம் சர்ச்சையானதால், உடனடியாக அமைச்சர் பாண்டியராஜன் அந்த வீடியோவை ட்விட்டர் பக்கத்திலிருந்து நீக்கி விட்டார்.