காரில் கட்சி கொடி, தோளில் அதிமுக துண்டு சிக்கலில் சிக்கிய அமைச்சர் யார் தெரியுமா?
அமைச்சர் வேலுமணி மீது கோவை குனியமுத்தூர் காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவின் போது கோவை தொண்டாமுத்தூர் தொகுதியில் திமுக வேட்பாளர் கார்த்திகேய சிவசேனாபதிக்கும் அதிமுகவினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் கார்த்திகேய சிவசேனாபதி தாக்கப்பட்டார்.
அவரது கார் மீதும் அதிமுக மற்றும் பாஜகவினர் தாக்குதல் நடத்தினர். இந்த தாகுதல் குறித்து மாவட்ட ஆட்சியர் நாகராஜனிடம் திமுக வேட்பாளர் கார்த்திகேய சிவசேனாபதி புகார் அளித்தார்.

மேலும்,குனியமுத்தூர் அரசு பள்ளி வாக்குச்சாவடியில் அமைச்சர் வேலுமணி தேர்தல் விதிமுறைகளை மீறி வாக்குச்சாவடியில் இருந்து 100 மீட்டர் தொலைவிற்குள் கட்சி கொடியுடன் காரில், அதிமுக துண்டு அணிந்து சென்றார்.
இது தேர்தல் நடத்தை விதிமீறல் என்பதால் தொண்டாமுத்தூர் தொகுதி மண்டல அலுவலர் ராஜா முகமது காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
புகாரை ஏற்றுக்கொண்ட குனியமுத்தூர் போலீசார் உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.