திருப்பதிக்கு கொண்டு செல்லப்பட்ட தமிழ்நாடு பட்ஜெட் ஆவணம் - கம்யூனிஸ்ட் கட்சிகள் கண்டனம்

Tamil nadu Andhra Pradesh Budget 2026
By Karthikraja Aug 01, 2026 02:00 PM GMT
Report

தமிழ்நாடு பட்ஜெட் ஆவணம் வழிபாட்டிற்காக திருப்பதிக்கு கொண்டு செல்லப்பட்டதற்கு கம்யூனிஸ்ட் கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன.

திருப்பதிக்கு கொண்டு செல்லப்பட்ட தமிழ்நாடு பட்ஜெட்

தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர் ஆகஸ்ட் 5ஆம் தேதி தொடங்க உள்ளது. ஆகஸ்ட் 5ஆம் தேதி தமிழக பட்ஜெட்டும், ஆகஸ்ட் 6ஆம் தேதி வேளாண் பட்ஜெட்டும் தாக்கல் செய்யப்பட இருக்கிறது.

தவெக அரசின் முதல் பட்ஜெட் என்பதால், இதில் பல்வேறு முக்கிய அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

திருப்பதிக்கு கொண்டு செல்லப்பட்ட தமிழ்நாடு பட்ஜெட் ஆவணம் - கம்யூனிஸ்ட் கட்சிகள் கண்டனம் | Minister Tirupati Visit With Tn Agriculture Budget

இந்நிலையில், வேளாண்மை துறை அமைச்சர் வினோத், வேளாண் பட்ஜெட்டின் வரைவு நகலை திருப்பதி ஏழுமலையான கோவிலுக்கு கொண்டு சென்று சிறப்பு தரிசனம் மேற்கொண்டுள்ளார்.

இதுவரை, தமிழ்நாட்டில் பட்ஜெட் ஆவணங்கள் தாக்கல் செய்யபப்டும் முன் இவ்வாறு கோவிலுக்கு சென்று வழிபாடு மேற்கொண்டதில்லை என்பதால் இது குறித்து விமர்சனங்கள் எழுந்துள்ளது.

இது அமைச்சரின் தனிப்பட்ட நம்பிக்கை என ஒரு சிலர் கூறி வந்தாலும், அரசின் பட்ஜெட் ஆவணத்தை மத வழிபாட்டுடன் இணைப்பது, மதச்சார்பின்மை கோட்பாட்டிற்கு எதிரானது என பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

CPI, CPIM கண்டனம்

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள மதுரை எம்.பி சு.வெங்கடேசன், "பட்ஜெட் ஆவணங்கள் என்பது இறைவனுக்கான காணிக்கையோ, அல்லது ஆன்மீகப் பொருட்களோ அல்ல; அவை மக்களின் வரிப்பணம் எப்படிச் செலவிடப்படும் என்பதைக் கூறும் அரசியல் சாசன ஆவணம். 

தனிமனிதர்களின் மத நம்பிக்கைக்கு அரசியல் ஆவணங்களை காணிக்கையாக்குவது அரசியல்சட்ட விரோதம்" என தெரிவித்துள்ளார்.

இது குறித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் மு. வீரபாண்டியன் வெளியிட்டுள்ள பதிவில், "தமிழ்நாட்டின் வேளாண்மைத்துறை அமைச்சர் ஆர். வினோத், வரவிருக்கும் பட்ஜெட் கூட்டத்தொடரில் தாக்கல் செய்யப்பட உள்ள ,வேளாண் பட்ஜெட் வரைவு நகலைத் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வைத்து சிறப்பு வழிபாடு செய்துள்ளார்.

ஒரு மதச்சார்பற்ற நாட்டில் ,பல்வேறு மதங்கள், வழிபாட்டுமுறைகள், நம்பிக்கைகள் மற்றும் நாத்திகர்களும் உள்ள ஒரு மதச்சார்பற்ற நாட்டில், மதம்,ஆன்மீகம்,கடவுள் நம்பிக்கை என்பது தனிப்பட்ட விவகாரமாக இருக்க வேண்டும். அரசோடு, அரசியலோடு அவற்றை கலகக் கூடாது.

தமிழ்நாடு அரசின் 2026-27 ஆம் ஆண்டுக்கான வேளாண் பட்ஜெட் என்பது அரசு ஆவணமாகும். அதை ஒரு குறிப்பிட்ட மதத்தின்,ஒரு குறிப்பிட்ட பிரிவினர் வணங்கும் வழிபாட்டுத் தளத்தில் வைத்து சிறப்பு வழிபாடு செய்தது நமது அரசியல் சட்டத்திற்கும்,மதச்சார்பின்மை கோட்பாட்டிற்கும் ,பன்மைத்துவத் திற்கும் எதிரானதாகும்.

மதச்சார்பின்மை கோட்பாட்டிற்கு எதிராக அமைச்சர் வினோத் அவர்கள் செயல்பட்டது கண்டனத்திற்குரியது. தவெக அரசும்,அமைச்சர்களும் மதச்சார்பற்ற கொள்கையை உறுதியுடன் கடைபிடிக்க வேண்டும்.

சட்டமன்றத்தில் முன்வைக்கப்பட வேண்டிய ஒரு அரசு ஆவணத்தை,அதற்கு முன்பாகவே பொதுவெளியில் வைப்பது என்பது சட்டத்திற்கு புறம்பான,ரகசியக் காப்பு உறுதி மொழிக்கு எதிரான நடவடிக்கையாகும்.

விவசாயிகளின் ,விவசாயத் தொழிலாளர்களின் வாழ்வாதாரப் பிரச்சினையான மேகதாது பிரச்சினைக்கு அனைத்துக் கட்சிகள் மற்றும் அனைத்து விவசாயிகள் சங்கங்களின் கூட்டத்தை கூட்டி ஒத்தக்கருத்தை உருவாக்க முயலாத தவெக அரசு, விவசாயிகளின் கடன்களை முழுமையாக ரத்து செய்யாத தவெக அரசு, வேளாண்மையை ,விவசாயிகளை பாதுகாக்க வேளாண்மை பட்ஜெட்டை வைத்து சிறப்பு வழிபாடு நடத்தியுள்ளதாக தவெக அரசின் அமைச்சர் கூறுவது பகுத்தறிவுக்குப் பொருந்தாத வாதமாகும். 

எனவே, இத்தகையப் போக்குகளை தவெக அமைச்சர்களும்,அரசும் கைவிட வேண்டுமென இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு செயற்குழு வலியுறுத்துகிறது" என தெரிவித்துள்ளார்.