தமிழகத்தில் பேருந்து கட்டணம் உயர்கிறதா? - விளக்கம் அளித்த அமைச்சர் எஸ்.எஸ் சிவசங்கர்..!
பேருந்து கட்டண உயர்வு குறித்து முதலமைச்சருடன் கலந்து ஆலோசித்து முடிவெடுக்கப்படும் என்று போக்குவரத்து துறை அமைச்சர் எஸ்.எஸ் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.
பெரம்பலுாரில் புதிய வழித்தடங்களில் போக்குவரத்து சேவையை அமைச்சர் எஸ்.எஸ் சிவசங்கர் தொடங்கி வைத்தார்.
இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அவர்,அண்டை மாநிலங்களில் பேருந்து கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.
அந்த இடங்களுக்கு செல்லும் நமது தமிழ்நாடு அரசு பேருந்துகளுக்கு இடையே கட்டண விகிதம் ஏற்படுகிறது. இது அண்டை மாநில ஒப்பந்தத்தின் படி,சரி செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
இது குறித்து அலுவலர்கள் புதிய கட்டண விகிதத்தை வரையறை செய்து கொடுத்துள்ளார்கள். இதுகுறித்து முதலமைச்சருடன் ஆலோசனை செய்து முடிவெடுக்கப்படும் என்று தெரிவித்தார்.
தமிழ்நாடு போக்குவரத்து கழகம் ரூ.48,500 கோடி கடன் சுமையில் சிக்கித் தவித்து வருகிறது. தமிழ்நாட்டில் பேருந்து கட்டணம் உயர்த்துவது குறித்து இதுவரை முடிவு செய்யப்படவில்லை.
முதலமைச்சர் இது ஒரு சேவை என்பதால் பொதுமக்களுக்கு நிறைவான சேவை வழங்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
போக்குவரத்து தொழிலாளர்களின் சம்பள உயர்வு,போனஸ் உள்ளிட்ட பிரச்சனைகளும் விரைவில் பேசித் தீர்க்கப்படும்.
பேருந்து நிலையங்களில் பயணிகளிடம் அத்துமீறும் திருநங்கைகள் குறித்து புகார் வந்தால் அவர்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.