தமிழக அமைச்சரின் சகோதரர் தற்கொலை : அதிர்ச்சியில் குடும்பத்தினர் காரணம் என்ன?
தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபுவின் சகோதரர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சேகர்பாபுவின் சகோதரர் தேவராஜ்
தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபுவின் சகோதரர் தேவராஜ், சென்னை ஓட்டேரியிலுள்ள நாராயணா முதல் தெருவில் அமைந்துள்ள தனது இல்லத்தில் குடும்பத்துடன் வசித்து வருகின்றார்.
இந்நிலையில் நேற்று இரவு ஒன்பதரை மணி அளவில் இவர் தனது இல்லத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது. இதையறிந்து அதிர்ச்சி அடைந்த அவரது குடும்பத்தினர் உடனடியாக காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.
காவல்துறை விசாரணை
சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர், அவரது உடலைக் கைப்பற்றி உடற்கூராய்விற்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தேவராஜ், கடந்த சில நாட்களாக கடுமையான வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்ததாக காவல்துறையின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இதன் காரணமாக அவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் அவரது உயிரிழப்பிற்கான முழு காரணம் உடற்கூராய்வு அறிக்கைக்கு பின்னரே தெரியவரும் என்பதால் அது குறித்து காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் அமைச்சரின் சகோதரர் தற்கொலை செய்த சம்பவம் அப் பகுதியில் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.