கைது செய்யப்பட்ட ஒருவர் அமைச்சர் அது தமிழகத்திற்கு பெரும் தலைகுனிவாகும் : ஈபிஎஸ் அறிக்கை
செந்தில்பாலாஜி குறித்து முதல்வர் பேசியதை பகிர்ந்த அதிமுக தகவல் தொழில்நுட்பப் பிரிவு நிர்வாகி கௌதம் அவர்கள் கைது செய்யப்பட்டதற்கு எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.
ஈபிஎஸ் அறிக்கை
உச்சநீதிமன்ற ஆணையின்படி மத்திய அமலாக்கத் துறை சட்ட விரோத பணப் பரிமாற்ற புகார் தொடர்பாக திமுக அமைச்சர் செந்தில்பாலாஜி கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, சட்ட விரோத செயல்களிலேயே இந்த விடியா திமுக அரசு தொடர்ந்து செயல்பட்டு வருகிறது.
தமிழகத்திற்கு தலைகுனிவு
தமிழ் நாட்டில் தற்போது நடைபெற்று வரும் மக்கள் விரோத, ஜனநாயக விரோத, அரசியல் சட்டத்திற்கு புறம்பாக ஆட்சி நடத்திவரும் நிர்வாகத் திறனற்ற முதலமைச்சர் திரு. ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது, தற்போது கைது செய்யப்பட்டுள்ள செந்தில் பாலாஜியைப் பற்றி ஏற்கெனவே விமர்சனம் செய்ததை, தன்னெழுச்சியாக உள்நோக்கமின்றி சமூக வலைதளங்களில் விமர்சனம் செய்து வரும் இளைஞர்கள், சமூக பார்வையாளர்கள், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக நிர்வாகிகள் பலர் மீது விடியா திமுக அரசு, தனது ஏவல் துறை மூலம் பொய் வழக்குகள் புணைந்து, கைது நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதை வன்மையாகக் கண்டிக்கிறேன்.
செந்தில்பாலாஜியின் விஷயத்தில் பொதுமக்கள் என்ன கூறுகிறார்கள்; தனது கட்சியைச் சேர்ந்தவர்கள் உண்மையாக என்ன நினைக்கிறார்கள் என்பதை உணர்ந்து, இப்போதாவது நிர்வாகத் திறனற்ற முதலமைச்சர் திரு. ஸ்டாலின், பிரதான எதிர்க்கட்சியை மிரட்டுவதைக் கைவிட வேண்டும். இனியும் தன்னை திருத்திக்கொள்ளவில்லை என்றால் அதற்குரிய விளைவுகளை சந்திக்க நேரிடும்.
செந்தில்பாலாஜி குறித்து விடியா திமுக அரசின் முதலமைச்சர் பேசியதை பகிர்ந்த கழக தகவல் தொழில்நுட்பப் பிரிவு நிர்வாகி திரு. @Gowthamadmk1216 அவர்கள் கைது செய்யப்பட்டதற்கு மாண்புமிகு கழகப் பொதுச் செயலாளர் திரு. @EPSTamilNadu அவர்கள் கடும் கண்டனம்!#ReleaseGowtham pic.twitter.com/xgbWM77PU3
— AIADMK (@AIADMKOfficial) June 17, 2023
மிரட்டி ஊழல் வாதியை ஒரு புனிதர் போல் காட்டும் முயற்சியை இந்த விடியா திமுக அரசும், அதன் பொம்மை முதலமைச்சரும் உடனடியாகக் கைவிட வேண்டும். ஒரு சிறைப் பறவையை இலாகா இல்லாத அமைச்சராக தொடர வைக்க வேண்டும் என்ற நிர்ப்பந்தம் இந்த முதலமைச்சருக்கு ஏன் வந்தது?
திமுக-வின் கூட்டணிக் கட்சியினர், நடக்கின்ற சம்பவங்களை ஆராய்ந்து, சிந்தித்து அதில் உள்ள உண்மைத் தன்மையை உணர்ந்து செயல்பட்டால், மக்களிடத்தில் அவர்களுடைய அடையாளங்கள் மங்காமல் இருக்கும். கைது செய்யப்பட்ட ஒருவர் அமைச்சராக நீடித்தால், தமிழகத்திற்கு பெரும் தலைகுனிவாகும்.
இது, வரலாற்றுப் பிழையாக என்றென்றும் நீடிக்கும். அரசியல் நாகரீகம் கருதி, அவரை அமைச்சரவையில் இருந்து உடனடியாக விடுவிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.