அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு மூளை நரம்பில் கட்டி!
அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு மூளை நரம்பில் சிறிய கட்டி இருப்பதாக எம்ஆர்ஐ பரிசோதனையில் தெரியவந்துள்ளது.
கைது - சிறையில் அடைப்பு
சட்ட விரோத பணப் பரிமாற்ற தடை சட்ட வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜி கடந்த ஜூன் 14-ம் தேதி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார்.
பின்னர், அவரிடம் அதிகாரிகள் 5 நாட்கள் விசாரணை நடத்தினர். இந்த வழக்கில், அவருக்கு எதிராக, ஆகஸ்ட் 12-ம் தேதி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.
பின்னர், சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுப்படி, அவர் மீதான வழக்கு விசாரணை, சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது.
அவரது ஜாமீன் மனுக்களை, சென்னை உயர் நீதிமன்றமும், மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றமும் அடுத்தடுத்து தள்ளுபடி செய்தன.
நீதிமன்றக் காவல் அக்டோபர் 20-ம் தேதியுடன் முடிந்த நிலையில், புழல் சிறையில் இருந்து காணொலி மூலம் ஆஜர்படுத்தப்பட்டார். அவரது நீதிமன்றக் காவல் நவம்பர் 22-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது.
அவரது நீதிமன்றக் காவல் இதுவரை 10-வது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே, வழக்கு விசாரணை, அறுவை சிகிச்சை உள்ளிட்ட காரணங்களால் செந்தில்பாலாஜியின் எடை குறைந்துள்ளது.
சிறையில் அவ்வப்போது உடல்நலக் குறைவும் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதற்கு சிறை மருத்துவர்கள் முதலுதவி சிகிச்சை அளித்து வந்தனர். தேவைப்படும் போது புழல் சிறையில் மருத்துவ பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கடந்த அக்டோபரில் அவருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டதால், ஆம்புலன்ஸில் ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. உடல்நிலை தேறிய பிறகு, மீண்டும் புழல் சிறைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
மூளையில் கட்டி
இந்நிலையில், செந்தில் பாலாஜிக்கு கடந்த 15ம் தேதி மீண்டும் உடல்நலக் குறைவு ஏற்பட்டது. சிறை மருத்துவர்கள் பரிசோதித்த நிலையில், மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அழைத்து வரப்பட்டார்.
அங்கிருந்து அண்ணா சாலையில் உள்ள அரசு பன்னோக்கு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு, மருத்துவப் பரிசோதனைகள் நடத்தப்பட்டன. பின்னர் அவர் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்தநிலையில், அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு மூளை நரம்பில் சிறிய கட்டி இருப்பதாக எம்ஆர்ஐ பரிசோதனையில் தெரியவந்துள்ளது.
மூளை நரம்பில் சிறுகட்டி இருப்பதால் கடும் தலைவலிக்கு காரணமாக இருந்திருக்கலாம் என்றும் கழுத்தின் பின் பகுதியில் வலி ஏற்படும் பகுதியில் சவ்வு பாதிப்பும் கண்டறியப்பட்டுள்ளது என்றும் இவை இரண்டும் தீவிர பாதிப்பு இல்லை மருந்துகளிலேயே குணப்படுத்தலாம் என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.