அடேங்கப்பா... மின்வாரியத்திற்கு இவ்வளவு கோடி கடனா?
புதிய மின் இணைப்பு பெறுவோரிடம் மின் கம்பங்கள் மற்றும் மின் மாற்றிகள் அமைக்க எந்தவிதக் கட்டணமும் வசூலிக்க கூடாது என தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளதாக தமிழக மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு மின்வாரியம் சார்பாக மதுரை மண்டலத்தில் மின்வாரிய அதிகாரிகள் பங்கேற்ற ஆய்வுக் கூட்டத்தில் கலந்து கொண்ட மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், "கடந்த அதிமுக ஆட்சியில் 9 மாதங்களாக மேற்கொள்ளாத பராமரிப்பு பணியை பத்தே நாட்களில் முதலமைச்சரின் உத்தரவிற்கு இணங்க போர்க்கால அடிப்படையில் மேற்கொண்டு நிறைவு செய்து இருக்கிறோம்" என தெரிவித்தார்.
மேலும் , "மின் நுகர்வோர் சேவை மையமான 'மின்னக'த்திற்கு வரப்பெற்ற கோரிக்கைகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது என்றும், கடந்த காலங்களில் புதிய மின் இணைப்பு பெறுகின்ற போது, மின் கம்பங்கள் அல்லது மின் மாற்றிகளை இடப் பெயர செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டால் அந்த செலவினங்கள் மின் இணைப்பு பெறுவோரிடம் வசூலிக்கப்பட்டது.
தற்போது தமிழக முதலமைச்சர் ஆணைக்கிணங்க இந்த செலவினங்கள் தொகை இனி நுகர்வோரிடம் வசூலிக்கப்பட மாட்டாது என செந்தில் பாலாஜி கூறினார்.
தமிழத்தில் உற்பத்தி செய்யப்படும் மின்சார அளவிற்கும், உபயோகப்படுத்தும் மின்சார அளவிற்கும் உள்ள இடைவெளியால் பல கோடி ரூபாய் மின் வாரியத்திற்கு ஏற்படும் இழப்பை தடுத்து நிறுத்தும் விதமாக, தமிழகம் முழுவதும் மின் கணக்கீட்டிற்கு ஸ்மார்ட் மீட்டர்களைப் பொருத்தப்படும் என்றும், கடந்த காலங்களில் நிர்வாகக் கோளாறுகளால் மின் வாரியத்திற்கு ஏற்பட்ட இழப்புகள் குறித்து ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்தார்.
மேலும் மின்வாரியம் 1 லட்சத்து 59 ஆயிரம் கோடி ரூபாய் கடனில் இருக்கிறது. வருடத்திற்கு 15 ஆயிரம் கோடி ரூபாய் வட்டி செலுத்தக் கூடிய சூழல் உள்ளது. இந்த வருடம் வட்டி விகிதத்தை வங்கிகளிடம் பேசி குறைக்க எடுத்த நடவடிக்கைகள் மூலம் 2000 கோடி ரூபாய் வரை வட்டி செலுத்துவதில் சேமிக்கப் பட்டுள்ளது.
இது போன்ற ஆக்கப்பூர்வமான பணிகள் தொடர்வதுடன், மின் வாரியத்தில் சிறப்பான சீர்த்திருத்தங்கள் செய்ய நடவடிக்கை எடுத்து வருகிறோம் என்றும் அவர் கூறினார்.