எதிரிகளும் பாராட்டும் முதல்வராக மு.க.ஸ்டாலின் திகழ்கிறார்.. அமைச்சர் சேகர்பாபு புகழாரம்..
அரசியல் கட்சிகள் மட்டும் அல்லாமல் எதிரிகளும் பாராட்டும் முதல்வராக மு.க.ஸ்டாலின் உருவாகியிருப்பதாக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார்.
சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் கொரோனா சிகிச்சை பிரிவில் கூடுதலாக ஏற்படுத்தப்பட்டுள்ள படுக்கை வசதி மற்றும் சிகிச்சை குறித்து இந்து சமய அறநிலைத் துறை அமைச்சர் சேகர்பாபு, மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் ஆகியோர் ஆய்வு செய்தனர்.
அதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சேகர்பாபு,இந்து கோவில்களின் சொத்து விவரங்களை இணையத்தில் பதிவேற்றப்படும் என்ற அரசின் முடிவை டிவிட்டர் மூலம் ஜக்கிவாசுதேவ் போன்ற மாற்று கருத்து உடையவர்களும் வரவேற்றிருப்பதாகவும். ஆட்சி பொறுப்பேற்ற 15 நாட்களில் அரசியல் கட்சிகள் மட்டும் அல்லாமல் எதிரிகளும் பாரட்டும் முதல்வராக மு.க.ஸ்டாலின் உருவெடுத்திருப்பதாகவும் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் அடுத்த ஒருவாரத்திற்குள் ஆக்சிஜன் வசதி கொண்ட 172 படுக்கைகள் செயல்படுத்தப்படும் என்றார். மேலும் அவசர ஊர்தியில் தொற்றாளர்கள் சிகிச்சைக்காக காத்திருக்கும் நிலையை தவிர்க்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாகவும், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் தொற்றாளர்களை உறவினர்கள் பார்க்க வருவதை தவிர்க்கும் விதமாக மருத்துவமனை வளாகத்தில் டிஜிட்டல் பலகை மூலம் நோயாளிகளின் உடல்நிலை தொடர்பான அறிவிப்பு வெளியிட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.