கோவில்களில் அனைத்து சமுதாயத்தினருக்கும் அனுமதியா? - அமைச்சர் சேகர்பாபு பேட்டி

minister sekar babu hindu religious department talks about temple entry
By Thahir Dec 15, 2021 11:16 AM GMT
Report

தமிழகத்தில் உள்ள முக்கிய திருக்கோவில்களில் இந்துக்கள் மட்டுமே அனுமதி என்கிற நடைமுறையை மாற்ற சட்ட வல்லுநர்கள், கோவில் குருமார்களிடம் கலந்து பேசி பின்னர் முதல்வருடன் கலந்தாய்வு செய்து முடிவுகளை மேற்கொள்வோம் என தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு திருச்சியில் பேட்டியளித்துள்ளார்.

திருச்சி வயலூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு ஆய்வு மேற்கொண்டார்.

கோவில் வளாகத்தில் மராமத்து பணிகளை நடத்துவது தொடர்பாக பல்வேறு விவரங்களை கேட்டறிந்தார், அதன் பின் கோயிலுக்கு சொந்தமான மண்டபங்கள் மற்றும் திருக்குளத்தை ஆய்வு செய்தார்.

இதன் பின் செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய அமைச்சர் சேகர் பாபு,

“தமிழகத்தில் உள்ள திருக்கோவில்களில் திருப் பணிகளை மேற்கொள்ள தேவைப்படும் நிதிகளை அந்த கோவிலின் வருமானம் வாயிலாக மேற்கொண்டு, ஆன்மீகத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கவும்,

பக்தர்களின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்ய ஆய்வு மேற்கொண்டு அதனை ஏற்பாடு செய்யவும் முதல்வர் அறிவுறுத்தி உள்ளார்.

வயலூர் முருகன் கோவிலில் பல்வேறு இடங்களில் புனரமைப்பு பணிகள் மேற்கொள்ள இருக்கிறது. வாரியார் மண்டபம் மற்றும் வள்ளி மண்டபத்தை முறையாக புனரமைப்பு செய்ய வழிவகை செய்ய உள்ளோம்” என தெறிவித்தார்.

மேலும், முக்கிய கோவில்களில் இந்துக்கள் மட்டுமே அனுமதி என்கிற போர்ட் அகற்றப்படுமா ? என்ற கேள்விக்கு,

“காலம் காலமாக உள்ள சில நடமுறை இது, இது போன்ற அறிவுப்புகளை சட்ட வல்லுனர்களிடமும், கோவிலில் உள்ள தலைமை குருமார்களிடமும் கலந்து பேசி இறுதி வடிவம் கிடைத்த பின்னர் முதல்வருடன் கலந்தாய்வு செய்து முடிவை மேற்கொள்வோம்.இதனை சரி செய்ய வழிவகை செய்வோம்” என்றார்.

ஸ்ரீரங்கம் கோவிலுக்கு வந்த நடன கலைஞர் ஜாஹிர் உசேனை தடுத்த ரங்கராஜன் நரசிம்மன் விவகாரம்  குறித்து கேட்டபோது,

“இது குறித்து காவல் துறையினரிடம் கோவில் இனை ஆனையர் புகார் வழங்கி உள்ளார். ஜாஹிர் உசேனும் புகார் அளித்துளார்.

காவல்துறை ஒருபுறம் விசாரணை நடத்தி வரும் அதே நேரத்தில் இணை ஆணையர் தலைமையில் திருக்கோவிலின் சார்பில் விசாரணை நடத்தி அறிக்கை கேட்டுள்ளோம்.

ஓரிரு நாளில் அறிக்கை பெற்று அரசிடம் கலந்து பேசி நடுநிலையோடு அதில் நடவடிக்கை எடுப்போம்”

கோவில்களில் அறங்காவலர்கள் குழு நியமனம் குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு,

“10 ஆண்டுகளாக இது கிடப்பில் போடப்பட்ட விஷயம் எனவே இதனை உடனடியாக சரி செய்ய முறைப்படி நீதிமன்ற வழிகாட்டல்களோடு அரங்காவலர் குழு தலைவர்கள் நியமனம் செய்யப்படுவார்கள்.

ஒரு சில கோவில்களில் பரம்பரை பரம்பரையாக அறங்காவலர் குழுவை சேர்ந்தவர்களாக உள்ளார்கள்,சில இடங்களில் குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்களாக அந்த பணிகள் இருந்துள்ளார்கள்.

எனவே இதனை அனைத்தையும் ஆய்வு செய்து தற்போது 300 கோவில்களில் மட்டும் முதற்கட்டமாக அறங்காவலர்கள் நியமிப்பது தொடர்பாக அறிவிப்பை வெளியிட்டுள்ளோம்.

அதேபோல் இந்த விவகாரத்தைப் பொறுத்தவரை கமிட்டி ஒன்றை அமைத்துள்ளோம், அந்த கமிட்டி முறைப்படி விசாரணை செய்து இந்தக் நியமனம் குறித்த தகவல்களை அளிப்பார்கள்.

எனவே அறங்காவலர் குழு நியமனம் என்பது முறைப்படி நேர்த்தியாக நடைபெறும்.

பி.ஆர்.ஓக்கள் மாவட்ட ஆட்சியர் வாயிலாக தான் நியமிக்கப்படுகிறார்கள். திருக்கோயிலில் நடைபெறும் நிகழ்வுகள் குறித்து முறைப்படி பத்திரிக்கையாளர்களுக்கு தகவல்களை அளிக்க வழிவகை செய்யப்படும்.

இதில் உள்ள குறைகள் இனி வரும் நாட்களில் சரி செய்யப்படும்”

ஸ்ரீரங்கத்தில் உள்ள பல்வேறு பிரச்சினைகளை ரங்கராஜன் நரசிம்மன் ஆதாரத்தோடு எடுத்துக் கூறி வருகிறார் என்ற கேள்விக்கு,

“முறையான புகார்களை நாங்கள் கண்டிப்பாக ஏற்று நடவடிக்கை எடுப்போம். ஆனால் அதே நேரம் பிரிவினைவாதத்தை ஏற்படுத்தும் எந்த ஒரு கருத்தையும் இந்து சமய அறநிலைய துறை ஏற்றுகொள்ளாது.

இந்த ஆட்சி பொறுப்பேற்று தமிழகம் முழுவதும் 541 கோவில்களில் திருப்பணிகள் மேற்கொள்ள அனுமதி வழங்கி பணிகளை துவங்கி உள்ளோம் . அதே போல் விரைவாக பணிகளை முடித்து கும்பாபிஷேகம் செய்ய ஏற்பாடுகளைச் செய்வோம்” என பதிலளித்தார்.