நடிகை, எம்.எல்.ஏ., அமைச்சர் வரிசையில் நடிகை ரோஜாவின் புது அவதாரம் - வைரலாகும் வீடியோ
ஆந்திராவில் கோடைகால விளையாட்டுப் பயிற்சி முகாம்களை அம்மாநில அமைச்சரும், நடிகையுமான ரோஜா தொடங்கி வைத்த புகைப்படம், வீடியோக்கள் இணையத்தில் வைரலாகியுள்ளது.
ஆந்திரப்பிரதேசத்தில் உள்ள இந்திரா காந்தி முனிசிபல் கார்ப்பரேஷன் ஸ்டேடியத்தில் மாநில விளையாட்டு ஆணையத்தின் (SAAP) சார்பாக நடத்தப்படும் கோடைகால விளையாட்டுப் பயிற்சி முகாம்களை சுற்றுலா, கலாச்சாரம் மற்றும் இளைஞர் முன்னேற்றத் துறை அமைச்சர் ஆர்.கே. ரோஜா தொடங்கி வைத்தார். கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா தொற்று காரணமாக இந்த கோடைக்கால முகாம்கள் நடைபெறாத நிலையில் தற்போது தொடங்கியுள்ளது.
இந்நிகழ்ச்சியில் பேசிய ரோஜா, கிராம அளவில் திறமையானவர்களை அடையாளம் கண்டு அவர்களை வளர்க்கும் பணியில் மாநில அரசு ஈடுபட்டுள்ளதாகவும், இதன் ஒரு பகுதியாக மாநிலம் முழுவதும் 48 துறைகளில் ₹83.50 லட்சம் செலவில் 1,670 விளையாட்டு மற்றும் விளையாட்டு பயிற்சி முகாம்கள் நடத்தப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.
மேலும் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை கோடைக்கால முகாம்களுக்கு அனுப்புமாறும், அவர்களை தொலைபேசிகளுடன் நேரத்தை செலவிடுவதற்குப் பதிலாக உடல் செயல்பாடுகளை ஊக்குவிக்குமாறும் அவர் கேட்டுக் கொண்டார்.
முதலமைச்சர் ஜெகன் மோகன் தலைமையிலான அரசு பல்வேறு துறைகளில் சாதித்து வரும் சர்வதேச விளையாட்டு வீரர்களுக்கு பரிசுத் தொகை வழங்கி ஊக்குவித்து வருவதாகவும், மாநிலத்தில் இதுவரை சுமார் 1,462 விளையாட்டு வீரர்களுக்கு ₹4.5 கோடிக்கு மேல் வழங்கப்பட்டுள்ளது என்றும் ரோஜா கூறினார். அதேபோல் மாநில அரசு விளையாட்டுத்துறையின் இட ஒதுக்கீட்டின் கீழ் சுமார் 2,000 விளையாட்டு வீரர்களுக்கு வேலை வழங்கியுள்ளது எனவும் அவர் தெரிவித்தார்.
முன்னதாக நிகழ்ச்சியை தொடங்கி வைத்த ரோஜா கிரிக்கெட், வில்வித்தை, கூடைப்பந்து போன்ற விளையாட்டுகளை ஆடி கூடியிருந்தவர்களை உற்சாகப்படுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.