பட்டென தலைக்குப்புற கவிழ்ந்த பேருந்து...பட்டென காரை நிறுத்திய அமைச்சர் சிவசங்கர் - 70 பேர் காயம்
விருத்தாச்சலத்தில் அரசுப் பேருந்து தலைக்குப்புற கவிழ்ந்த விபத்தில் 70க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.
தலைக்குப்புற கவிழ்ந்த பேருந்து
கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் அடுத்த சேப்பாக்கம் கிராமத்திலிருந்து, இன்று காலை சுமார் 7 மணி அளவில், 22 என்ற தடம் எண் கொண்ட அரசு பேருந்து புறப்பட்டு, நல்லூர், மேமாத்தூர் கிராமங்கள் வழியாக, விருத்தாச்சலம் நோக்கி சென்று கொண்டிருந்தது.
பேருந்து கோமங்கலம் கிராமத்தின் அருகே வந்த போது பேருந்து ஓட்டுநர் மயக்கம் அடைந்ததாக கூறப்படுகிறது.
அப்போது பேருந்து கட்டுப்பாட்டை இழந்து பாசன வாய்க்காலில் தலைக்குப்புற கவிழந்து விபத்துக்குள்ளானது. அப்போது பேருந்தில் பயணம் செய்த பயணிகள் கூச்சல் எழுப்பியுள்ளனர்.
மீட்பு பணிகளை துரிதப்படுத்திய அமைச்சர்
இதையடுத்து அருகில் இருந்த பொதுமக்கள் பேருந்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். இதனிடையே அவ்வழியே வந்த போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தனது காரை விட்டு இறங்கி வந்து மீட்பு பணிகளை துரிதப்படுத்தினார்.
மேலும் விபத்தில் காயம் அடைந்தவர்களை மீட்டு அரசு மருத்துமனைக்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். பேருந்தில் பயணம் செய்த 70 பேர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
விபத்தில் பேருந்தை ஓட்டி வந்த அரசு பேருந்து ஓட்டுனர் சரவணனுக்கு தலையில் பலத்த காயம் அடைந்த நிலையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.
விபத்து குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.