வெள்ளத்தில் மாட்டிக்கொண்ட அமைச்சர்... ஹெலிகாப்டர் மூலம் மீட்ட மீட்புப்படையினர்...
மத்தியப்பிரதேச மாநிலத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கிராமத்தில் சிக்கிய அமைச்சரை விமானம் மூலம் மீட்புப்படையினர் மீட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வடமாநிலங்களில் தென்மேற்குப் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக மத்தியப்பிரதேசம், மேற்குவங்கம் ஆகிய மாநிலங்களின் பெரும்பாலான பகுதிகளில் கனமழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
இதனிடையே மத்தியப்பிரதேசத்தின் சிவபுரி மாவட்டத்தில் உள்ள சித்தாஹரி பகுதியில் வெள்ளப்பெருக்கால் வீட்டின் மேற்கூரையில் தவித்துவந்த 4 பேர், விமானப்படை ஹெலிகாப்டர்கள் மூலம் மீட்கப்பட்டனர். இதேபோல் தாட்டியா மாவட்டத்திலுள்ள சிந்து ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், சியோந்தா பகுதியில் கோயிலின் மேற்கூரையில் தவித்துவந்த 7 பேர் விமானப்படை ஹெலிகாப்டர்கள் மூலம் மீட்கப்பட்டனர்.
பாதிக்கப்பட்ட மக்களுக்கு விமானம் மூலம் உணவுப் பொட்டலங்களை வழங்கும் பணி தொடங்கியுள்ள நிலையில் வெள்ளச் சேதங்கள் குறித்து பிரதமரிடம் எடுத்துரைத்ததாகவும், அனைத்து உதவிகளும் செய்யப்படும் என்று பிரதமர் உறுதியளித்திருப்பதாகவும் முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் கூறியுள்ளார்.
இந்நிலையில் தாட்டியா மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மக்களுக்கு உதவுவதற்காக சென்ற உள்துறை அமைச்சர் நரோட்டம் மிஷ்ரா, வெள்ளத்தில் சிக்கிக் கொண்டார். அவரை விமான மூலம் மீட்புப்படையினர் மீட்டனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.