தமிழ்நாட்டில் மின்கட்டணம் உயர்த்தப்படுகிறதா? அமைச்சர் விளக்கம்
தமிழ்நாட்டில் மின்கட்டணம் உயர்த்தப்பட உள்ளதாக வெளியான தகவலுக்கு மின்சாரத்துறை அமைச்சர் விளக்கமளித்துள்ளார்.
தமிழ்நாட்டில் மின்கட்டணம் உயர்த்தப்படுகிறதா?
தமிழ்நாட்டில் 2022 ஆம் ஆண்டுக்கு பின்னர், ஆண்டுதோறும் ஜூன் மாதம் மின்கட்டணம் உயர்த்தப்பட்டு வருகிறது. 2027 ஆம் ஆண்டு வரை கட்டணத்தை உயர்த்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இதனால் இந்த ஆண்டும் மின்கட்டணம் உயர்த்தப்படும் என்ற தகவல் வெளியானது.

இந்நிலையில், இது குறித்து மின்சாரத்துறை அமைச்சர் சிடிஆர் நிர்மல் குமார் விளக்கமளித்துள்ளார்.

இது குறித்து பேசிய அவர், "மின்சார வாரியம் கிட்டத்தட்ட இரண்டரை லட்சம் கோடி கடன் சுமையில் இருக்கிறது. 1,40,000 பேர் வேலை பார்க்க வேண்டிய இடத்தில் இன்றைக்கு 70,000 பேர் தான் வேலை பார்க்கிறார்கள்.
மின்சாரத் துறையை வெறும் மேலோட்டமாக மாற்றாமல், அதன் அடிப்படையில் இருந்து முழுமையாகச் சீரமைக்க வேண்டிய கட்டாயம் உள்ளது.
துறையில் அண்மையில் நடத்தப்பட்ட ஆய்வுகளில் சில முறைகேடுகள் கண்டுபிடிக்கப்பட்டு, முதற்கட்டமாக, தவறு செய்த 2 அதிகாரிகள் உடனடியாகப் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
புகார் எண்கள் மட்டுமின்றி, எக்ஸ், ஃபேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்கள் வாயிலாகப் பொதுமக்கள் மின்தடை குறித்துப் பதிவிட்டாலும், அதனை மின்சார வாரியம் உடனடியாகக் கவனித்துச் சரிசெய்து வருகிறது.
அதாவது என்ன காரணங்களால் மின்சாரம் தடைப்படுகிறது, டெக்னிக்கல் ஃபால்ட் என்றால் எவ்வளவு நேரம் ஆகும் என்ற தெளிவுகள் மக்களுக்குக் கொடுக்கப்பட வேண்டும்.
இப்போதைக்குக் மின் கட்டணத்தை உயர்த்தும் எந்த எண்ணமும் அரசிடமோ, முதல்வரிடமோ இல்லை. அரசாக முன்னெடுத்து உயர்த்தும் எண்ணம் எதுவுமில்லை" என தெரிவித்துள்ளார்.