அமைச்சரின் மகளுக்கே பாலியல் தொல்லை - யாத்திரையில் நடந்த அதிர்ச்சி சம்பவம்
மத்திய அமைச்சரின் மகளுக்கே பாலியல் தொல்லை அளிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அமைச்சர் மகள்
நாட்டில் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், மத்திய அமைச்சரின் மகளுக்கே பாலியல் தொல்லை அளிக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மகாசிவராத்திரியை முன்னிட்டு மஹாராஷ்டிராவில் ஒவ்வொரு ஆண்டும் சந்த் முக்தை யாத்திரை(Sant Muktai Yatra) நடக்கும். இதில் ஏராளமானோர் கலந்து கொள்வர். இந்த ஆண்டு கோத்தாலி கிராமத்தில் நடைபெற்ற யாத்திரையில், மத்திய இளைஞர் விவகாரம் மற்றும் விளையாட்டுத் துறை இணையமைச்சர் ரக்ஷா காட்சேவின்(Raksha Khadse) மகளும் கலந்து கொண்டுள்ளார்.
பாலியல் தொல்லை
இந்த யாத்திரையின் போது சிறுமியான அமைச்சரின் மகள் மற்றும் அவரின் நண்பர்களுக்கு 7 பேர் கொண்ட கும்பல் பாலியல் தொல்லை அளித்துள்ளனர். அப்போது அமைச்சர் மகளின் பாதுகாவலர்கள் அவர்களை தடுத்தபோது, அவர்களுடன் மோதலில் ஈடுபட்டு மீண்டும் தொல்லை செய்ததாக கூறப்படுகிறது. இதனை சிறுமி தனது தாயான மத்திய அமைச்சரிடம் தெரிவித்துள்ளார்.
இதை கேட்டு அதிர்ச்சியடைந்த மத்திய இணையமைச்சர் ரக்ஷா காட்சே, முக்தாய்நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், தனிப்படை அமைத்து இந்த குற்றத்தில் ஈடுபட்டவர்களை தேடி வருகின்றனர். இதில் தற்போது ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த கும்பல் ஏற்கனவே பள்ளிக்கு செல்லும் வழியில் சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை அளித்துள்ளது தெரிய வந்துள்ளது.
இது குறித்து பேசிய மஹாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ், ‛‛சில கட்சியில் உள்ளவர்கள் இதுபோன்ற நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் கைது நடவடிக்கையை தொடங்கி உள்ளனர். தவறு செய்தவர்கள் மன்னிக்கப்பட மாட்டார்கள். அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்" என தெரிவித்துள்ளார்.