சாதி பெயரை குறிப்பிட்டு திட்டிய விவகாரம் : போக்குவரத்து துறை அமைச்சர் ராஜ கண்ணப்பனின் துறை மாற்றம்
தமிழக போக்குவரத்து துறை அமைச்சராக பதவி வகித்து வரும் ராஜ கண்ணப்பனின் துறை தற்போது மாற்றப்பட்டுள்ளது.
அமைச்சர் எஸ்.ராஜகண்ணப்பன் பலமுறை சாதியைச் சொல்லி என்னை அவமானப்படுத்தினார் என ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூர் ஊராட்சி ஒன்றிய ஆணையர் ராஜேந்திரன் நேற்று குற்றம் சாட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.
இந்நிலையில் போக்குவரத்து துறையின் அமைச்சராக இருந்த ராஜகண்ணப்பனை அத்துறையில் இருந்து நீக்கி பிற்படுத்தப்பட்டோர் நலத்துறைக்கு மாற்றம் செய்து ராஜ் பவன் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் பரிந்துரையை ஏற்று அமைச்சர்களின் துறைகள் மாற்றப்பட்டதாக ஆளுநர் அலுவலக செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கையை தொடர்ந்து பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராக இருந்த சிவசங்கர், போக்குவரத்து துறை அமைச்சராக மாற்றப்பட்டுள்ளார்.
முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவையில் முதல் முறையாக அமைச்சர்களின் இலாகா மாற்றம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.