புதிது புதிதாக குற்றவாளிகள் உருவானால் நாங்கள் என்ன செய்வது? சட்ட அமைச்சர் ரகுபதி
இந்தியாவிலே தமிழ்நாட்டில் தான் சட்ட ஒழுங்கு சிறப்பாக உள்ளதாக அமைச்சர் ரகுபதி பேசியுள்ளார்.
ரகுபதி
தமிழகத்தில் சட்ட ஒழுங்கு சீர்கெட்டுள்ளது. தமிழகம் கொலை மாநிலமாக மாறி உள்ளது வேதனை அளிக்கிறது என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றஞ்சாட்டியிருந்தார்.
இந்நிலையில் தமிழக சட்ட துறை அமைச்சர் ரகுபதி இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக செய்தியாளர்கள் சந்திப்பு நடத்தியுள்ளார்.செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அவர், தொடர் தோல்வி விரக்தியில் அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ், தமிழகம் கொலை மாநிலமாக மாறிவிட்டதாக கூறுகிறார். தமிழகம் கொலை மாநிலம் அல்ல; சமூக விரோதிகளை களை எடுக்கும் மாநிலம் என பேசினார்.
சட்ட ஒழுங்கு
பழிவாங்கும் போக்கிலான முன் விரோத கொலைகள் தான் தமிழகத்தில் நடக்கின்றன. மற்றபடி வன்முறைச் சம்பவங்கள் நடக்கவில்லை. சட்டம் ஒழுங்கு சீர் குலையும் அளவுக்கு தமிழ்நாட்டில் எந்த வன்முறைச் சம்பவங்களும் நடைபெறவில்லை. தமிழகத்தில் மக்கள் தொகை பல மடங்கு அதிகரித்துள்ளது. அதற்கேற்ப இதுபோன்ற சம்பவங்களின் எண்ணிக்கை கூடும், குறையும். ஆனால், அரசாங்கம் இதற்கு எந்தவகையிலும் பொறுப்பாக முடியாது. அரசாங்கம் பொறுப்பாக இருந்தால் எங்கள் மீது குற்றம்சாட்டலாம்.
பழிக்கு பழியாக நடக்கும் கொலைகளுக்கு அரசு பொறுப்பாகுமா? ஆனால் இதனை தடுக்க நிறைய நடவடிக்கைகள் எடுத்து வருகிறோம். முன்னாள் குற்றவாளிகளை கண்காணித்துக் கொண்டு தான் இருக்கிறோம். ஆனால் புதிது புதிதாக குற்றவாளிகள் உருவாகின்றனர். அவர்களை என்ன செய்ய முடியும்?காவல் துறை தொடர்ந்து கட்டுப்படுத்தும் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அச்சுறுத்தல் இருப்பதாக கூறும் அரசியல் தலைவர்களுக்கு அரசு பாதுகாப்பு கொடுக்க தயாராக உள்ளது.
சிறைகளை பழுது பார்க்க நிதியை தான் கேட்டுள்ளோம். எந்த சிறையும் மூடும் திட்டம் அரசுக்கு கிடையாது.
இந்தியாவிலேயே தமிழ்நாடு தான் அமைதிப் பூங்கா. தமிழ்நாடு சட்டம் ஒழுங்கில் சிறப்பாக உள்ளது. சட்டம் ஒழுங்கை சிறப்பாக பராமரிப்பதால் தான் இந்தியாவின் முதன்மை மாநிலமாக தமிழ்நாடு இன்றைக்கும் உள்ளது. எல்லா தொழிலதிபர்களும் தொழில் தொடங்க தமிழ்நாட்டை நாடி வருகிறார்கள். என பேசியுள்ளார்.