ஒன்றிய அரசு விவகாரத்தில் வானதி- பிடிஆர் மோதல் - சட்டசபையில் பரபரப்பு
மத்திய அரசை எந்த பெயரில் அழைத்தாலும் அதன் அதிகாரத்தை மாற்ற முடியாது என கோவை தெற்கு தொகுதி எம்எல்ஏ வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் திமுக ஆட்சிப் பொறுப்பேற்றதில் இருந்து மத்திய அரசை ஒன்றிய அரசு என அழைத்து வருகிறது. இது பலத்த சர்ச்சைகளை ஏற்படுத்தினாலும் தமிழக அரசு அந்த சொல்லை தொடர்ந்து பயன்படுத்தி வருகிறது.
இந்நிலையில் இன்று சட்டசபையில் பேசிய வானதி சீனிவாசன் ரோஜாவை எந்த பெயரை வைத்தாலும் அதன் வாசத்தை மாற்ற முடியாது.
அதே போல மத்திய அரசை எந்த பெயர் வைத்து அழைத்தாலும் மத்திய அரசின் அதிகாரத்தை குறைக்க முடியாது. சமூகநீதிக்கு பிரதமர் மோடி ஒரு உதாரணம் என தெரிவித்தார்.
இதற்கு பதிலளித்து பேசிய நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், ரோஜாவை யாராவது மல்லிகை என்பார்களா? குஜராத் முதலமைச்சராக இருந்த போது மோடி எழுப்பிய கேள்விகள், முன்னுதாரணமாக உள்ளதாகக் குறிப்பிட்டார். மக்கள் பிரச்னைகளை தான் சட்டமன்றத்தில் பேச வேண்டும் எனவும் தெரிவித்தார்.
மேலும் வானதி சீனிவாசன் இன்றைய கூட்டத்திற்கு எம்எல்ஏவாக வந்துள்ளாரா? அல்லது அரசியல் கட்சியின் பாதுகாவலராக வந்துள்ளாரா? என்று அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கேட்க சட்டசபையில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.