மதுரை மேம்பால விபத்துக்கு இதுதான் காரணமா? - அமைச்சர் பிடிஆர் விளக்கம்
மதுரையில் மேம்பால விபத்து நிகழ்ந்த இடத்தில் நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் நேரில் ஆய்வு செய்தார்.
மதுரை நத்தம் சாலையில் புதிய பாலம் ஒன்று கட்டப்பட்டு வருகிறது. தேசிய நெடுஞ்சாலை துறை சார்பில் ரூ.544 கோடி மதிப்பில் மதுரை தல்லாகுளம் முதல் செட்டிகுளம் வரை 7.3 கிலோ மீட்டருக்கு மேம்பாலம் அமைக்கும் பணிகள் கடந்த 2018 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் தொடங்கப்பட்டது.
இதன்மூலம் திருச்சி, சென்னை மாவட்டங்களுக்கு செல்லும் பயணிகள் விரைவாக செல்ல முடியும் வகையில் இந்த பாலம் கட்டப்பட்டு வருகிறது. மும்பையை சேர்ந்த ஆஷிஷ் தாகூர் என்பவருக்கு சொந்தமான JMC projects india lmt என்ற ஒப்பந்த நிறுவனம் கட்டுமான பணிகளை மேற்கொண்டுள்ளது.
இந்த பாலத்தின் இருபுறமும் சர்வீஸ் பாலங்கள் 35 மீட்டர் இடைவெளியுடன் தூண்கள் அமைக்கப்பட்டுள்ளன. பாலத்திற்கும், தூணிற்கும் பேரிங் மூலம் இணைப்பு ஏற்படுத்துவதற்கு ஹைட்ராலிக் இயந்திரம் மூலம் இன்று பாலத்தை தூக்கியுள்ளனர். அப்போது ஹைட்ராலிக் இயந்திரம் உடைந்த காரணத்தால் விபத்து ஏற்பட்டது. இதில் உத்தர பிரதேசத்தை சேர்ந்த ஆகாஷ் சிங் என்ற 26 வயது இளைஞர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
விபத்தின் காரணமாக பாலத்தின் முழுமையான கட்டுமான பணிகள் நிறுத்தப்பட்டுள்ள நிலையில் சம்பந்தப்பட்ட அனைவரிடமும் விசாரணை நடைபெற்று வருகிறது. விபத்து நடந்த இடத்தை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன், நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன், மாவட்ட ஆட்சியர் அனீஷ் சேகர், காவல் துறை அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்தனர்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்,தொழில்நுட்ப கோளாறு காரணமாகவே விபத்து ஏற்பட்டுள்ளதாகவும், தொழிலாளர்களுக்கு உரிய பயிற்சி வழங்கப்படாமல் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
மேலும் விபத்து குறித்து தேசிய நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் மூலம் ஒப்பந்ததாரரிடம் விசாரணை நடத்தப்படும் என அவர் கூறினார்.