மாநில அளவில் நீட் தேர்வு நடத்த மத்திய அரசிடம் தமிழக அரசு அனுமதி கோரிக்கை..!
மருத்துவ படிப்புக்கு மாநில அளவில் நீட் தேர்வு நடத்த மத்திய அரசிடம் தமிழக அரசு அனுமதி கோரியுள்ளதாக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கூறியுள்ளார்.
பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு மற்றும் நீட், ஜேஇஇ போன்ற நுழைவுத்தேர்வுகள் குறித்து முடிவு எடுப்பதற்காக மாநில அரசுகளுடன் மத்திய அரசு இன்று ஆலோசனை நடத்தியது.
இக்கூட்டத்திற்கு பிறகு தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்தனர்.
அப்போது அமைச்சர் பொன்முடி கூறியதாவது, நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்பதே திமுகவின் நிலைப்பாடு என்பதை இன்றைய கூட்டத்தில் தெரிவித்தோம் என கூறினார்.
மேலும், மருத்துவ படிப்புகளில் மத்திய அரசின் ஒதுக்கீடுகளுக்கு வேண்டுமானால் தேசிய அளவிலான நீட் தேர்வை நடத்திக்கொள்ளுங்கள் என்றும், மாநில ஒதுக்கீட்டில் வரும் இடங்களுக்கு நாங்களே தனியாக தேர்வை நடத்திக்கொள்கிறோம் என்ற கோரிக்கையை முன்வைத்தோம் எனவும் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து, புதிய கல்விக்கொள்கையை தமிழகம் ஏற்காது என்ற கருத்தை அழுத்தம் திருத்தமாக கூறியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.