தடுமாற்றத்தால் பேசிவிட்டேன்; மன்னிப்பு கேட்ட பொன்முடி - சர்ச்சையும், பதவி பறிப்பும்
திராவிடர் கழகத்தின் மூத்த தலைவர்களில் ஒருவர் திருவாரூர் தங்கராசு. இவரது நூற்றாண்டு விழா, கடந்த 6ஆம் தேதியன்று சென்னையில் நடைபெற்றது.
அமைச்சர் க.பொன்முடி
திமுக இளைஞரணியின் தலைமை அலுவலகமான அன்பகத்தில் இந்த விழா நடைபெற்றது. தந்தை பெரியார் திராவிடர் கழகம் இதனை ஏற்பாடு செய்திருந்தது. இதில் தமிழ்நாடு வனத்துறை அமைச்சர் க.பொன்முடி, திரைப்பட இயக்குநர் கரு.பழனியப்பன், மூத்த வழக்கறிஞர் துரைசாமி உள்படப் பலர் கலந்து கொண்டனர்.
இதில் பேசிய அமைச்சர் க.பொன்முடி, தான் அண்ணாமலை பல்கலைக் கழகத்தில் படிக்கும் நாட்களில் 'அடல்ட்ஸ் ஒன்லி' பட்டிமன்றத்தை திராவிடர் கழகத்தினர் தமிழ்நாடு முழுவதும் நடத்தி வந்தனர். பட்டிமன்றத்தில் நானும் சபாபதி மோகனும் கலந்துகொள்வோம்.
சர்ச்சை பேச்சு
கோவையில் இந்தப் பட்டிமன்றத்தை மிகச் சிறப்பாக நடத்தினர். இதற்காக டிக்கெட் வாங்கிக் கொண்டு திரளாகக் கலந்து கொள்வார்கள். கடவுள் கொள்கைளில் காமச் சுமையை அதிகம் பரப்புவது சைவமா வைணவமா என்ற தலைப்பில் பட்டிமன்றம் நடக்கும். அந்தப் பட்டிமன்றத்தில் ’ஓர் இடத்தில் சொல்வோம். மகளிர் தவறாக நினைக்க வேண்டாம்’ எனக் கூறிவிட்டு, பாலியல் தொழிலாளருக்கும் வாடிக்கையாளருக்கும் நடந்த உரையாடல் எனக் குறிப்பிட்டு ஒரு கருத்தைத் தெரிவித்தார்.
மேலும், ’மகளிர் தவறாக நினைக்க வேண்டாம்’ என மீண்டும் கூறிவிட்டு இதற்கான விளக்கத்தையும் அளித்தார். இவையெல்லாம் திராவிடத்தைப் பரப்புவதற்கு எடுத்துக்கொண்ட நடவடிக்கைகள் எனக் குறிப்பிட்டார். அமைச்சரின் இந்தப் பேச்சு இணையத்தில் வைரலாக பரவியது.
கண்டனங்கள்
தொடர்ந்து இதுகுறித்து திமுக முன்னாள் செய்தித் தொடர்புத்துறை செயலாளர் கே.எஸ்.ராதாகிருஷ்ணன், ' இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலாவது சைவ, வைணவ மதங்களை ஓர் அமைச்சரே இவ்வாறு அவதூறாகப் பேச முடியுமா? தி.மு.க கூட்டத்துக்கு பெண்களும் குழந்தைகளும் வர முடியுமா?' எனக் கேள்வி எழுப்பியிருந்தார்.
பின், பொன்முடியின் பேச்சுக்குத் தனது எக்ஸ் பக்கத்தில் கண்டனம் தெரிவித்த திமுக எம்.பி கனிமொழி, ' அமைச்சர் பொன்முடியின் சமீபத்திய பேச்சு ஏற்றுக்கொள்ள முடியாதது. எந்தக் காரணத்துக்காகப் பேசப்பட்டிருந்தாலும் இப்படிப்பட்ட கொச்சையான பேச்சுகள் கண்டிக்கத்தக்கவை' எனப் பதிவிட்டார்.
பதவி பறிப்பு
இதனையடுத்து திமுக துணைப் பொதுச்செயலாளர் பதவியில் இருந்து அமைச்சர் பொன்முடி விலக்கப்படுவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். மேலும், அந்தப் பொறுப்பில் திருச்சி சிவா நியமிக்கப்பட்டு இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டது. ஆனாலும் பொன்முடியின் அமைச்சர் பதவியையும் பறிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. இந்து மக்கள் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில்தான், பொன்முடி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ”தந்தை பெரியார் திராவிடர் கழகம் நடத்திய ஒரு உள் அரங்கக் கூட்டத்தில், தகாத பொருளில் தவறான சொற்களைப் பயன்படுத்தி நான் பேசிய பேச்சுக்கு மனப்பூர்வமாக மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன். இந்தத் தகாத கருத்தை நான் பேசியது குறித்து உடனடியாக மனப்பூர்வமாக வருந்தினேன்.
நீண்ட காலம் பொது வாழ்க்கையில் உள்ள எனக்கு இதுபோன்ற தடுமாற்றம் ஏற்பட்டது குறித்து நான் மிகவும் வருந்துகிறேன். பலருடைய மனதைப் புண்படுத்தும் வகையில் இப்பேச்சு அமைந்து விட்டது குறித்தும், அவர்கள் தலைகுனியும் சூழல் ஏற்பட்டது குறித்தும் நான் மிகவும் மனம் வருந்துகிறேன். மனம் புண்பட்ட அனைவரிடமும் நான் பேசிய பேச்சுக்கு மீண்டும் மீண்டும் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
மீண்டும் மன்னிப்பு
முன்னதாக 2021ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலுக்குப் பின் திமுக ஆட்சி பொறுப்பு ஏற்றதிலிருந்தே சர்ச்சைப் பேச்சுகளில் அதிகம் அடிபடும் நபராக அமைச்சர் க.பொன்முடி இருந்து வருகிறார். விழுப்புரத்தில் நடைபெற்ற விழா ஒன்றில் பேசிய அமைச்சர் பொன்முடி, அரசின் திட்டத்தால் பெண்கள் ஓசியில் பயணம் செய்வதாகக் குறிப்பிட்டார். இந்தப் பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியது.
பின் அரசு விழா ஒன்றில் தொகுதியில் உள்ள குறைகளைக் கூறிய பெண்களிடம், "ஆமாம்.. நீங்க எல்லாம் அப்படியே எனக்கு ஓட்டுப் போட்டு கிழிச்சிட்டீங்க..' எனக் குறைபட்டுக் கொண்டார். இந்தப் பேச்சு கவனம் பெற்று பேசுபொருளாக மாறியது.
இதற்கிடையில், விழுப்புரம் மணம்பூண்டியில் 2022ல் நியாய விலைக் கடை திறப்பு விழா நடைபெற்றது. அதில் முகையூர் ஒன்றிய குழு தலைவரைச் சுட்டிக்காட்டிய பொன்முடி, "அவரே தலித் சமூகத்தைச் சேர்ந்தவர் தான்" எனக் கூறிவிட்டு அவரிடம் சாதியை உறுதி செய்துகொள்ளும் வகையில் கேள்வி கேட்டது சர்ச்சையாக வெடித்தது குறிப்பிடத்தக்கது.