பிளஸ் 2 முடித்த மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்...!
தமிழகத்தில் ஆகஸ்ட் 1ஆம் தேதி முதல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை தொடங்கும் என அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.
சென்னை நாமக்கல் கவிஞர் மாளிகையில் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, பொறியியல் கல்லூரி, பல்வகை தொழில்நுட்ப கல்லூரி, பல்கலைக் கழங்கள் குறித்த ஆய்வுக்கூட்டம் உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தலைமையில் நடைபெற்றது. இதில் உயர் கல்வித்துறைச் செயலாளர், தமிழ்நாடு அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும் 13 பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் ஆகியோர் பங்கேற்றனர்.
இந்த கூட்டத்தில் மாணவர் சேர்க்கை, நேரடி வகுப்புகள் நடத்துவது, தேர்வுகள், நிர்வாக செயல்பாடுகள், காலிப்பணியிடங்களை நிரப்புவது உள்ளிட்டவை குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் பொன்முடி, தமிழகத்தில் ஆகஸ்ட் 1ஆம் தேதி முதல் கல்லூரி மாணவர் சேர்க்கை தொடங்கும். 12ஆம் வகுப்பு மதிப்பெண் கணக்கிடப்பட்டு அதன் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெறும் என்றும் கூறினார்.
மேலும் அனைத்து பல்கலைக்கழகங்களிலும் எம்.பில்., படிப்பைத் தொடர்வது என்று முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் பொன்முடி தெரிவித்தார்.