மிரட்டும் ஒமைக்ரான்... ஜல்லிக்கட்டு நடக்குமா? - அமைச்சர் மூர்த்தி சொன்ன பதில் என்ன?
தமிழ்நாட்டில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்துள்ளது. 3ஆம் அலை தொடங்கிவிட்டதாக மக்கள் நல்வாழ்வு துறை தெரிவித்துள்ளது.
ஆகவே மக்கள் அனைவரும் மிகவும் எச்சரிக்கையுடனும் கொரோனா தடுப்பு விதிமுறைகளைப் பின்பற்ற வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளது.
அதேபோல முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக லெவல் 1 கட்டுப்பாடுகளையும் அரசு அமல்படுத்தியுள்ளது. பள்ளிகளில் நேரடி வகுப்புகள் ரத்து, தியேட்டர்கள், பேருந்துகளில் 50% அனுமதி என பல்வேறு கட்டுப்பாடுகள் மீண்டும் வந்துள்ளன
குறிப்பாக வார இறுதி நாட்களில் மத வழிபாட்டு தலங்களுக்கு தடை விதிக்கலாம் எனவும் கடைகளுக்கு நேர கட்டுப்பாடு அமல்படுத்தலாம் என்றும் அரசு ஆலோசித்து வருகிறது. இந்தாண்டு பொங்கல் பண்டிகை சிறப்பாக நடைபெறுமா என்பதில் கேள்வியெழுந்துள்ளது.
குறிப்பாக பிரபலமான ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறுமா என்பதில் மதுரை மக்களுக்குச் சந்தேகம் எழுந்துள்ளது. இதற்கு மதுரை மைந்தனும் அமைச்சருமான பி.மூர்த்தி விளக்கமளித்துள்ளார். இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், "ஜல்லிக்கட்டு போட்டிகள் கட்டுப்பாடுகளோடு நிச்சயமாக நடக்கும்.
கொரோனா தொற்று பரவினாலும் சூழ்நிலைக்கு தகுந்தவாறு கடும் கட்டுப்பாடுகளுடன் இந்தப் போட்டிகள் நடக்கும். 2006-2011ஆம் ஆண்டு ஆட்சியில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி, மோசமான சூழ்நிலையில் இருந்த அலங்காநல்லூர் சர்க்கரை ஆலையை முழுமையாக செயல்பட வைத்தார்.
அங்கு பணியாற்றும் தொழிலாளர்கள், பணியாளர்களுக்கு நிறைவான ஊதியமும், விவசாயிகளுக்கு கொள்முதல் விலையும் தடையில்லாமல் வழங்கி வந்தார். அதற்கு பின்னால் அதிமுக ஆட்சியில் கவனம் செலுத்தாமல் அந்த நிர்வாகம் சீர்கேட்டு சர்க்கரை ஆலை மூடப்பட்டது.
மேலும், எந்தெந்த மாவட்டத்தில் கரும்பு இருப்பு இருக்கிறது என்று ஆய்வு செய்து மாவட்ட ஆட்சியரிடம் அறிக்கை தாக்கல் செய்தால் முதல்வர், வேளாண்மை அமைச்சர் கவனத்திற்கு கொண்டு ஆலையை திறக்க நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.