கரும்பூஞ்சை தாக்குதலை எதிர்கொள்ள தயாராக உள்ளோம் - அமைச்சர் நாசர்
திருவள்ளர் மாவட்டத்தில் முதல் முறையாக 100 படுக்கைகள் கொண்ட இலவச சித்தா ஆயுர்வேத கொரோனா சிகிச்சை மையத்தை பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர் துவக்கி வைத்தார்.
திருவள்ளூர் மாவட்டத்தில் முதல் முறையாக சித்தா ஆயுர்வேத சிகிச்சைக்கு 100 படுக்கை வசதிகள் கொண்ட பாரம்பரிய மருத்துவ மையம் அமைக்கப்பட்டுள்ளது. இதனை பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர் குத்து விளக்கேற்றி துவக்கி வைத்தார்.
மேலும் அங்கு மேற்கொள்ளப்பட்டுள்ள வசதிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார். இதன் பின்னர் நாசரத்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவ கல்லூரியில் தாயார் நிலையில் உள்ள ஆக்சிஜன் கொண்ட 60 படுக்கைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதை பார்வையிட்டு பயன்பாட்டிற்கு கொண்டுவந்தார்.
இதனைத் தொடர்ந்து பூந்தமல்லி நகராட்சி உட்பட்ட 21 வார்டுகளுக்கு தேவையான கிருமி நாசினி தெளிக்கும் வாகனத்தை கொடியசைத்து துவக்கி வைத்தார்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் நாசர் பேசுகையில், "திருவள்ளூர் மாவட்டத்தில் முதல் முறையாக இந்த சித்தா, ஆயுர்வேத மருத்துவ மையம் துவங்கப்பட்டுள்ளது. இது முற்றிலும் இலவசமாக இங்கு சிகிச்சை அளிக்கப்பட உள்ளது.
சித்தா ஆயுர்வேத மருத்துவ முறையில் சிகிச்சை பெற்றவர்கள் இதுவரை உயிரிழந்த தகவல்கள் இல்லை. மக்கள் இதனை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். திருவள்ளூர் மாவட்டத்தில் கரும்பூஞ்சை தாக்குதல் இதுவரை இல்லை அவ்வாறு பாதிக்கப்பட்டாலும் அதனை எதிர்கொள்ள தயாராக உள்ளதாக தெரிவித்தார். இந்த ஆய்வின்போது
மாவட்ட ஆட்சியர் பொன்னையா எம்.எல்.ஏ கிருஷ்ணாசாமி ஆகியோர் உடனிருந்தனர்.