ஆவடி கொரோனா சிகிச்சை மையத்தை பார்வையிட்ட அமைச்சர் நாசர்
ஆவடி அரசு மருத்துவமனையில் ஆக்சிசன் வசதியுடன் புதிதாக அமைக்கப்பட்டுள்ள கொரோனா சிகிச்சை மையத்தை பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர் கவச உடையுடன் சென்று ஆய்வு செய்து நோயாளிகளிடம் குறைகளை கேட்டறிந்தார்.
ஆவடி அரசு மருத்துவமனையில் ஆக்சிசன் வசதியுடன் புதிதாக அமைக்கப்பட்டுள்ள கொரோனா சிகிச்சை மையத்தை பால்வளத் துறை அமைச்சர் சா.மு.நாசர் மாவட்ட ஆட்சியர் பொன்னையாவுடன் ஆய்வு செய்தார்.
இதற்காக கொரோனா கவச உடையுடன் மருத்துவமனைக்கு சென்ற அமைச்சர் கொரோனா நோய் தொற்று ஏற்பட்ட நோயாளிகளை நேரடியாக சந்தித்து ஆறுதல் கூறினார்.
மேலும் மருத்துவமனையில் அளிக்கப்படும் சிகிச்சை விவரம் குறித்தும் நோயாளிகளிடம் கேட்டறிந்தார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் நாளை மறுநாள் முதல் ஆவடி மருத்துவமனையில் ஆக்சிசன் வசதியுடன் 50 படுக்கைகள் செயல்படும் என்றார்.
திருவள்ளூர் மாவட்டத்தை பொருத்தவரை அரசு மருத்துவமனை மட்டுமல்லாமல் தனியார் மருத்துவமனைகளையும் ஆய்வு செய்து பாரபட்சமில்லாமல் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க உத்தரவிட்டுள்ளதாகவும், கொரோனா பரவலிலும், இறப்பு விகிதத்திலும் தமிழகத்தில் மூன்றாவது இடத்தில் உள்ள திருவள்ளூர் மாவட்டத்தை கட்டுப்படுத்த நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
மேலும் திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் போதுமான அளவு ஆக்சிசன் இருப்பு உள்ளதாகவும், ஆக்சிசன் இல்லாமல் உயிர் இழப்பு ஏற்படுவதாக கூறுவது தவறான தகவல் என்றார்.