“ஆவினில் நடந்த ஒட்டுமொத்த முறைகேடுகளுக்கும் காரணம் ராஜேந்திர பாலாஜி, விரைவில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகும்” - அமைச்சர் நாசர்

rajendra balaji hidden in delhi tamil nadu police after him minister nazar about rajendra balaji
By Swetha Subash Dec 29, 2021 07:27 AM GMT
Swetha Subash

Swetha Subash

in அரசியல்
Report

ஆவினில் நடந்த ஒட்டுமொத்த முறைகேடுகளும் ராஜேந்திர பாலாஜியால் தான் என பால் வளத்துறை அமைச்சர் நாசர் தெரிவித்துள்ளார்.

கடந்த அதிமுக ஆட்சியில் பால்வளத்துறை அமைச்சராக இருந்த ராஜேந்திர பாலாஜி கடந்த 2009 ஆம் ஆண்டு முதல் பணி நியமனங்கள், பொருட்கள் கொள்முதல்,

தற்காலிக பணி நியமனங்களில் நடந்த முறைகேடுகள் ஆவினுக்கு ஏற்பட்ட வருவாய் இழப்பு உள்ளிட்ட புகார்களின் சிக்கியுள்ளார்.

அத்துடன் ஆவின் உள்ளிட்ட அரசுத் துறைகளில் வேலை வாங்கித் தருவதாக சுமார் ரூ.3 கோடியை பெற்றுக்கொண்டு பண மோசடி செய்ததாக அவர் மீது விருதுநகர் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டது.

அதனடிப்படையில் ராஜேந்திர பாலாஜி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு தனிப்படை போலிஸார் அவரை தேடி வருகின்றனர்.

இந்த சூழலில் தனியார் நிறுவனங்களுக்கு நெய் விற்பனை செய்யப்பட்டது, திருப்பதி வெங்கடாசலபதி கோவிலில் லட்டு தயாரிப்பு அனுப்பியது உள்ளிட்ட தொடர்பாகவும் ராஜேந்திர பாலாஜி மீது அடுக்கடுக்கான புகார்கள் எழுந்த வண்ணம் உள்ளன.

இந்த நிலையில் வேலை வாங்கி தருவதாக பெற்ற பணத்தை திருப்பிக் கொடுக்காமல் மோசடி செய்த புகாரில் தலைமறைவாக உள்ள ராஜேந்திர பாலாஜியை பிடிக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில் பண மோசடி வழக்கில் தலைமறைவாக உள்ள முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி டெல்லியில் பதுங்கி உள்ளதாக கிடைத்த தகவலையடுத்து தனிப்படை போலீசார் டெல்லி விரைந்துள்ளது.

இதனிடையில், “ஆவினில் நடந்த ஒட்டுமொத்த முறைகேடுகளும் ராஜேந்திர பாலாஜியால் தான். பொறுத்திருந்து பாருங்கள் விரைவில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகும்” என பால் வளத்துறை அமைச்சர் நாசர் தெரிவித்துள்ளார்.