ஓரே மாதத்தில் திமுக அரசு இரண்டாம் அலையை கட்டுப்படுத்தியுள்ளது - அமைச்சர் பி.மூர்த்தி
மதுரை தோப்பூர் காசநோய் மருத்துவமனையில் கூடுதலாக அமைக்கப்பட்டுள்ள 200 ஆச்சிஜன் படுக்கைகள் சிறப்பு கொரோனா மையத்தை இன்று பார்வையிட்ட தமிழ்நாடு வணிகவரி மற்றும் பதிவுத் துறை அமைச்சர் பி. மூர்த்தி செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது அவர் கூறியதாவது, “முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் குற்றச்சாட்டு குறித்த கேள்விக்கு, நேற்று முன்னாள் மந்திரி ஜெயக்குமார் பேட்டிகளை தொலைக் காட்சியில் பார்த்தேன்.
அதிகாரிகள் இன்றைய அமைச்சர்களுக்கு ஒத்துழைப்பது கிடையாது என்கிறார். நான் சொல்கிறேன். கடந்த அதிமுக ஆட்சியில் முதல் அலை மூன்று மாதங்கள் நீடித்தது.
நாங்கள் எங்களது திமுக ஆட்சியில் பதவியேற்ற ஒரே மாதத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை அதிகாரிகளும் அமைச்சர்களும் ஒருங்கிணைந்து செயல்பட்டு, இரண்டாம் அலையை மதுரை மாவட்டத்தில் கட்டுக்குள் கொண்டு வந்து உள்ளோம்.
அதிகாரிகள் மற்றும் மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்ட முன் களப் பணியாளர்கள் ஒத்துழைப்போடு இறப்பு சதவிகிதத்தை பாதியாக குறைத்து உள்ளோம். சுயஉதவிக் குழுக்களைச் சேர்ந்த 4000 பேர் தியாக மனப்பான்மையோடு கிராமம் கிராமாகச் சென்று 3 மாதங்களில் செய்ய வேண்டிய கணக்கெடுப்பை 5 நாட்களில் செய்து முடித்து இருக்கிறார்கள் என அமைச்சர் பி. மூர்த்தி பதிலளித்தார்.
திமுக ஆட்சியில் ஆய்வுக் கூட்டங்கள் குறைவு என்ற அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் குற்றச்சாட்டு குறித்தக் கேள்விக்கு, கடந்த ஆட்சியில் ஆய்வுக் கூட்டங்களை மாநாடு போல் நடத்தினார்கள். வழிநெடுக முதலமைச்சர்க்கு கட்சிக்காரர்கள் நின்று வரவேற்றார்கள். நாங்கள் அப்படி அல்ல. நாங்கள் கட்டுக்கோப்பாக ஆய்வுக் கூட்டங்களை நடத்தி வருகிறோம் என்றார்.
இன்று கொரோனா தொற்று படிப்படியாக குறைந்து வருகிறது. ஆக்சிஜன் படுக்கைகள் ஆங்காங்கு காலியாக உள்ளன. இருந்தும் தொடர்ந்து ஆக்சிஜன் படுக்கைகளை அதிகரிக்கும் விதமாக, சிறப்பு கொரோனா சிகிச்சை மையங்களை ஆங்காங்கு அமைத்து வருகிறோம்.
2ம் அலை முடிந்து கொரோனா 3ம் அலை வந்தாலும் எதிர்கொள்ள அனைத்து முன்னேற்பாடு ஏற்பாடுகளோடு மதுரை மாவட்ட நிர்வாகம் தயாராக இருக்கிறது” என்றார்.