எதிர்க்கட்சி தொகுதிகளில் கொரோனோ தடுப்பு பணிகளில் பாரபட்சமா? - அமைச்சர் மூர்த்தி மறுப்பு
எதிர்க்கட்சி தொகுதிகளில் கொரோனோ தடுப்பு பணிகளில் பாரபட்சம் காட்டப்படுவதாக எழுந்த புகாருக்கு அமைச்சர் மூர்த்தி மறுப்பு தெரிவித்துள்ளார்.
ஊரடங்கு அமல்பட்டதால் செயல்படாமல் உள்ள மதுரை மாட்டுத்தாவணி மலர் சந்தையை வேறு இடத்தில் செயல்படுத்த இடம் தேர்வு செய்வது குறித்து வணிக வரித்துறை அமைச்சர் மூர்த்தி, ஆட்சியர் அனிஷ் சேகர் உள்ளிட்டோர் இன்று ஆய்வு மேற்கொண்டனர்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மூர்த்தியிடம், மதுரையில் எதிர்க்கட்சி சட்டமன்ற தொகுதிகளில் கொரோனோ தடுப்பு பணிகளில் பாரபட்சம் காட்டப்படுவதாக முன்னாள் அமைச்சர் ஆர்பி.உதயகுமாரின் குற்றச்சாட்டு குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
இதனை மறுத்த அவர், எதிர்க்கட்சி சட்டமன்ற உறுப்பினர்களின் அனைத்து தொகுதிகளிலும் பாரபட்சம் இல்லாமல் தடுப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றும், பாரபட்சம் காட்டுவதாக உரிய ஆதாரத்துடன் புகார் அளித்தால் உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.