ஜல்லிக்கட்டில் வெற்றி பெரும் வீரருக்கு அரசு வேலையா? அமைச்சர் மூர்த்தி பதில்
அவனியாபுரத்தில் உலக புகழ்பெற்ற ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்று வருகிறது.
ஜல்லிக்கட்டு
உலகம் முழுவதும் தமிழர்கள் அவர்கள் வசித்து வரும் பகுதிகளில் பொங்கல் திருநாளை வெகு சிறப்பாக கொண்டாடி வருகின்றனர். அதே போல் மதுரையில் உலக புகழ்பெற்ற ஜல்லிக்கட்டு திருவிழா நடைபெற்று வருகிறது.
பொங்கல் அன்று அவனியாபுரத்திலும், அடுத்த நாட்களில் பாலமேடு, அலங்காநல்லூரிலும் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறும்.
பரிசு
அவனியாபுரத்தில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டியை இன்று(14.01.2024) காலை அமைச்சர் பி.மூர்த்தி தொடங்கி வைத்தார். இப்போட்டியில் 1,100 காளைகளுடன் 900 மாடுபிடி வீரர்கள் பங்கேற்கவுள்ளனர். சீறி பாய்ந்து வரும் காளைகளை மாடுபிடி வீரர்கள் வீரமுடன் அடக்கி வருகின்றனர்.
ஒரு மணி நேரத்திற்கு ஒரு சுற்றாக போட்டி நடைபெறும். ஒவ்வொரு சுற்றிலும் சிறந்த மாடுபிடி வீரர்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்கள் இறுதி சுற்றில் பங்கேற்க உள்ளனர். போட்டியின் முடிவில் சிறந்த மாடுபிடி வீரருக்கு 8 லட்சம் மதிப்பிலான நிசான் காரும், சிறப்பாக விளையாடும் காளையின் உரிமையாளருக்கு 11 லட்சம் மதிப்பிலான டிராக்டர் வாகனமும் முதல் பரிசாக வழங்கப்படவுள்ளது.
போட்டியில் காளைகளை அடக்கும் மாடுபிடிவீரர்கள் மற்றும் பிடிபடாத காளை உரிமையாளர்களுக்கு தங்கம், வெள்ளி காசுகள், மிக்சி, கிரைண்டர், கட்டில், குக்கர், பேன், சைக்கிள் உள்ளிட்ட பல்வேறு பரிசுப் பொருட்கள் வழங்கப்படுகின்றன. 8 காளைகளை அடக்கி அவணியாபுரம் கார்த்தி முன்னிலையில் உள்ளார்.
அமைச்சர் மூர்த்தி
இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் மூர்த்தி, காவல்துறை, மாநகராட்சி, மருத்துவக்குழுவினர் இணைந்து கடந்த முறையை விட இந்த முறை சிறப்பாக ஏற்பாடு செய்துள்ளார்கள். 12,000 க்கும் மேற்பட்ட மாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஆனால் ஆன்லைன் மூலம் 3,300 மாடுகளுக்கு மட்டுமே டோக்கன் வழங்கப்பட்டுள்ளது.
கலைஞர் நூற்றாண்டு ஏறு தழுவுதல் அரங்கத்தில் சுற்றுலாதுறையும், மாவட்ட நிர்வாகமும் அங்கு போட்டிகள் நடத்த கட்டணத்தை நிர்ணயித்துள்ளது. இங்கு வாய்ப்பு கிடைக்காதவர்கள் அங்கு பங்கு பெறலாம்.
ஜல்லிக்கட்டில் சிறப்பாக செயல்படும் மாடுபிடி வீரர்களுக்கு அரசு வேலை வழங்க வேண்டுமென்ற கோரிக்கை நீண்டநாட்களாக உள்ளது என கேட்கப்பட்ட போது, "இது குறித்து துணை முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும்" என கூறினார்.