அரசியல் செய்வதை விட்டு விட்டு கொரோனாவை தடுக்க ஆலோசனை தாருங்கள்.. எதிர்கட்சியினரை சாடிய அமைச்சர்...
எதிர்க் கட்சியினர் அரசியல் செய்வதை விட்டு விட்டு கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை கூறுமாறு வணிகவரித் துறை அமைச்சர் பி. மூர்த்தி தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வந்த கொரோனா தொப்பை கட்டுப்படுத்த முழு ஊரடங்கை தமிழக அரசு அமல்படுத்தியது. மேலும் தடுப்பூசி உள்ளிட்ட பல்வேறு விழிப்புணர்வுகளையும் பொதுமக்களிடையே அரசு ஏற்படுத்தி வருகிறது.
இதனிடையே மதுரை மாவட்டம் திருமங்கலம் ஹோமியோ மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி துறை சார்பில் 50 படுக்கைகளுடன் கூடிய சிறப்பு கோவிட் சிகிச்சை மையத்தை திறந்து வைத்து, பார்வையிட்ட தமிழக வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி. மூர்த்தி செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது மதுரை மாவட்டத்தில் உள்ள 420 ஊராட்சிகளில் தற்போது 100 ஊராட்சிகளில் நேற்றும் இன்றும் கிராமப்புற மக்களுக்கு கொரோனா அறிகுறி தெரிந்த உடன் சிகிச்சை அளிக்க வசதியாக கிராமப் புறங்களில் வசிக்கும் செவிலியர்கள் மற்றும் மருத்துவர்களைப் பணிக்கு எடுக்கப்பட்டதாகவும், அங்கு 5 முதல் 10 படுக்கைகள் கொண்ட மையங்களை அமைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
மேலும் கடந்த ஆட்சிக் காலத்தில் எதிர்கட்சியினர் அம்மா மினி கிளினிக்குகளைத் திறந்தார்களே தவிர, அங்கு செவிலியர்கள் மற்றும் மருத்துவர்களைப் பணியமர்த்துவதில் சுணக்கம் காட்டி விட்டு, பதவியேற்ற 20 நாட்களில் போர்க்கால அடிப்படையில் கொரோனா தடுப்பு பணிகளில் ஈடுபடுவதை குறை சொல்லி அரசியல் செய்யப் பார்க்கிறார்கள் என்று அமைச்சர் பி.மூர்த்தி குற்றம் சாட்டினார்.
இவ்வாறு அரசியல் செய்வதை விட்டு விட்டு, கொரோனா தடுப்பு பணிகளில் நல்ல ஆலோசனைக் கூறுங்கள் என்றும், கொரோனா ஒழிப்புக்கு பிறகு உங்கள் அனைத்துக் கேள்விகளுக்கும் நிச்சயம் பதில் சொல்கிறோம் என்றும் அமைச்சர் பி.மூர்த்தி கூறினார்.