தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கு விதிக்கப்படலாம் - அமைச்சர் மா.சுப்பிரமணியன் எச்சரிக்கை
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்தால் கூடுதல் ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்படலாம் என மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
உலக தாய் பால் வார விழாவை முன்னிட்டு சென்னை ராஜிவ் காந்தி மருத்துவமனையில் மருத்துவ கல்லூரி மாணவர்களால் நடத்தப்பட்ட தாய் பால் விழிப்புணர்வு நிகழ்ச்சியில் தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்ரமணியன், அறநிலைத்துறை அமைச்சர் சேகர்பாபு, சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன் உருமாறிய கொரோனோ வைரஸ் குறித்து கண்டறிய தமிழகத்தில் இரண்டு ஆய்வகங்கள் அமைக்கப்பட இருப்பதாக தெரிவித்தார்.
மேலும் மாஸ்க் அணிந்து தனிமனித இடைவெளியை பொதுமக்கள் கட்டாயமாக பின்பற்ற வேண்டும் என்றும், கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள மாவட்டங்களில் அதைத் தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருவதாகவும் அவர் கூறினார். அதேசமயம் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்தால் மேலும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்படலாம் என்றும் மா.சுப்பிரமணியன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.