‘அண்ணனாக கேட்கிறேன்... கர்ப்பிணிகள் இப்படி பண்ணாதீங்க’ - உருகிய அமைச்சர் மா.சுப்பிரமணியன்

tngovernmnent ministermasubramanian
By Petchi Avudaiappan Sep 22, 2021 04:22 PM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in ஆரோக்கியம்
Report

கர்ப்பிணி பெண்கள் அறுவை சிகிச்சை மூலம் முன்கூட்டியே குழந்தையை பெற்றெடுக்கக்கூடாது என மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் கேட்டுக்கொண்டுள்ளார்.

சென்னை சைதாப்பேட்டையில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் துறை சார்பில் நடைபெற்ற சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சியில் அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன்,கீதா ஜீவன், தென் சென்னை எம்.பி.தமிழச்சி தங்கபாண்டியன் ஆகியோர் கலந்து கொண்டார்.

இந்நிகழ்ச்சியில் ஆயிரம் கர்ப்பிணிப் பெண்களுக்கு வளையல், சேலையுடன் கூடிய சீர்வரிசைப் பொருட்கள் வழங்கப்பட்டது. மேலும் கரு உருவான நாள் முதல் குழந்தை 2 வயதை எட்டும் வரையிலான 1000 நாட்களில் மழலைகளுக்கு ஏற்ற முறையில் தாய்மார்கள் எடுத்துக் கொள்ள வேண்டிய உணவு முறைகள் குறித்து விளக்கும் விதமாக உணவு, தானிய, காய்கறி வகைகளும் அரங்கில் காட்சிப்படுத்தப்பட்டிருந்தது.

நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், தமிழகத்தின் அனைத்து மருத்துவமனையிலும் தாய்ப்பால் வங்கியை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார். அதேசமயம் நினைத்த நேரத்தில்தான் குழந்தை பிறக்க வேண்டும் என நினைப்பது தவறு. பிறந்த தேதி, வழிபடும் தெய்வம், மூதாதையர் நினைவாக நினைத்த நேரத்தில் குழந்தையைப் பெற்றுக் கொள்ள வேண்டும் என்ற தவறான மனநிலைக்குப் பலரும் சென்றுவிட்டார்கள்.

ஆனால் முழு வளர்ச்சி பெறும் முன்பு குழந்தை பெற்றால் குழந்தைக்கு நிச்சயம் பாதிப்பு ஏற்படும். குழந்தையின் வளர்ச்சியைக் கெடுத்தால் பிறக்கும் குழந்தை ஆரோக்கியமான, திடகாத்திரமான குழந்தையாக இருக்காது. எனவே இயற்கையாக, சுகப் பிரசவத்தில் குழந்தை பிறக்கும் வகையில் நீங்கள் இருக்க வேண்டும் என உங்களின் அண்ணனாக இங்குக் கேட்டுக் கொள்கிறேன் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் உருக்கமாக பேசினார்.

தொடர்ந்து பேசிய அமைச்சர் கீதா ஜீவன் ஆணோ பெண்ணோ, எத்தனையாவது குழந்தையானாலும் சமமாகக் கருதி வளர்க்க வேண்டும் என்றும், குழந்தைகளிடையே கல்வி , உணவில் பாரபட்சம் காட்டக்கூடாது என்றும் கூறினார். மேலும் பெண் பிள்ளையை மதிக்க ஆண் பிள்ளைக்கு கற்றுத் தர வேண்டும் எனவும், நாள் நட்சத்திரம் பார்த்து முன் கூட்டியே அறுவை சிகிச்சை செய்வதைத் தவிர்க்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.