அமைச்சர் மரிய வில்சன் பேச்சால் சர்ச்சை: அரசியல் கட்சிகள் கண்டனம்
தமிழ் உச்சரிப்பு தொடர்பாக சட்டப்பேரவையில் நடைபெற்ற விவாதம் காரசாரமானதாக மாறியது.விவாதத்தில் அமைச்சர் மரிய வில்சன் ஆவேசமாகத் தெரிவித்த சில கருத்துகள் அரசியல் தளத்தில் விமர்சனத்திற்குள்ளாகி இருக்கின்றன.
நிதிநிலை அறிக்கை மீதான விவாதத்தின்போது, நிதியமைச்சர் மரிய வில்சனின் தமிழ் உச்சரிப்பு மற்றும் இலக்கணப் பயன்பாடு குறித்து மதிமுக சார்பில் உதயசூரியன் சின்னத்தில் வெற்றிபெற்ற கடையநல்லூர் எம்.எல்.ஏ. ராஜேந்திரன் விமர்சனம் தெரிவித்தார்.
அரசியல் களத்தில் எதிரொலி
இதற்கு பதிலளித்த அமைச்சர் ராஜ்மோகன், வட்டாரப் பேச்சு வழக்குகளிலும் தமிழ் தொடர்ந்து உயிர்ப்புடன் இருப்பதாகக் குறிப்பிட்டார்.
தொடர்ந்து பேசிய அமைச்சர் மரிய வில்சன், தனது கிறிஸ்தவ மதம் தனக்கு அன்பு என்ற மொழியை கற்றுக் கொடுத்ததாகக் கூறி ஆவேசமாக பதிலளித்தார்.அவரது பேச்சால் அவையில் பரபரப்பு ஏற்பட்ட நிலையில், சபாநாயகர் ஜேசிடி பிரபாகர் அவரை சமாதானப்படுத்த முயன்றார்.
எனினும், சமாதானம் அடையாத அமைச்சர், தன்னை கேலி செய்கிறீர்களா என திமுக உறுப்பினர்களை நோக்கிக் கேள்வி எழுப்பியதுடன், தனது மைக்கை வேகமாகத் தள்ளிவிட்டு அமர்ந்தார்.
இதனைத் தொடர்ந்து பேசிய எம்.எல்.ஏ. ராஜேந்திரன், தான் யாரையும் புண்படுத்தும் நோக்கில் கருத்து தெரிவிக்கவில்லை என விளக்கம் அளித்தார். முன்னாள் அமைச்சர் எ.வ.வேலுவும், அமைச்சர் மரிய வில்சனின் பேச்சு வழக்கில் தவறு இல்லை எனக் கூறினார்.

இதற்கிடையே, அமைச்சர் மரிய வில்சனின் கருத்துகளுக்கு அரசியல் கட்சிகளிடையே எதிர்வினைகள் எழுந்துள்ளன. தமிழ் மொழியின் ஆளுமையுடன் ஒரு மதத்தை ஒப்பிட்டு பேசுவது சரியா என பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பியதுடன், உணர்ச்சிவசப்பட்ட நிலையில் தமிழ் மொழி குறித்து தெரிவித்த கருத்துக்கு அமைச்சர் பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
அதேபோல், பாஜக மூத்த தலைவர் தமிழிசை செளந்தரராஜனும் அமைச்சர் மரிய வில்சனின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். ஆளும் கட்சியினருக்கு தமிழ் வெறும் வாயளவில் மட்டுமே இருப்பதாகவும், வாழ்க்கையில் இல்லை என்றும் அவர் விமர்சித்துள்ளார்.
இதனால், தமிழ் உச்சரிப்பு தொடர்பாக சட்டப்பேரவையில் தொடங்கிய விவாதம், தற்போது அரசியல் தளத்திலும் பெரும் எதிர்வினைகளை ஏற்படுத்தி வருகின்றது.