ஊடகங்களை மிரட்டும் செயல்: அண்ணாமலைக்கு அமைச்சர் மனோ தங்கராஜ் கண்டனம்
ஊடகங்கள் குறித்து பாஜக தலைவர் அண்ணாமலை கூறிய கருத்துக்கு அமைச்சர் மனோ தங்கராஜ் கண்டனம் தெரிவித்துள்ளார்.
கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டாறை மையமாக வைத்து புதிய தாலுகா உருவாக்கப்பட்டுள்ளது.புதிய தாலுகா கட்டடத்திற்காக மாவட்ட ஆட்சியர் அரவிந்த் முன்னிலையில் தமிழக தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சர் மனோ தங்கராஜ் இன்று அடிக்கல் நாட்டினார்.
பின்னர், செய்தியாளர்களைச் சந்தித்த அவர், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தமிழக ஊடகங்கள் அனைத்தும் 6 மாதங்களில் தங்களுக்கு ஆதரவாக செய்திகள் வெளியிடுவார்கள் என்று கூறியிருப்பது ஊடகத்தை மிரட்டுகிற செயல். இது வன்மையாக கண்டிக்கத்தக்கது. ஊடகத்துறை என்பது தனித்துவமாக செயல்பட அனுமதிக்க வேண்டிய துறை.

கருத்து சுதந்திரத்தை பதிவு செய்ய வேண்டிய கடமையை, தனிப்பட்ட ஒரு கட்சிக்கு ஆதரவாக செயல்படுத்த கட்டாயப்படுத்துவது என்பதை மிரட்டல் தொனியாகவே பார்க்கிறேன் என அமைச்சர் மனோ தங்கராஜ் கூறியுள்ளார்.
மேலும் குமரி மாவட்டத்தில் ஒரு சில பிரச்சனைகள் இருந்தாலும் அதை மத ரீதியாக பெரிதுபடுத்தாமல் அனைத்து சமூக மக்களும் இணைந்து வாழுகின்ற ஒரு சூழ்நிலையை உருவாக்க வேண்டும் என்பதே திமுகவின் நோக்கம்” என்றும் அவர் கூறினார்.