தமிழ்நாட்டில் தடுப்பூசி இவ்வளவு தான் உள்ளது - உண்மையை போட்டுடைத்த அமைச்சர் மா.சுப்ரமணியன்

Vaccine Modi Ma Subramanian
By mohanelango Jun 11, 2021 05:40 AM GMT
Report

மாநிலங்கள் கொரோனா தடுப்பூசி கையிருப்பு குறித்த தகவல்களை வெளியிடக்கூடாது என்று ஒன்றிய அரசு சமீபத்தில் சுற்றறிக்கை அனுப்பியிருந்தது கடும் சர்ச்சைக்குள்ளாகி இருக்கிறது.

இதற்கு தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். மக்களிடையே உண்மை நிலையை தெரிவிப்பதுதான் சரியானதாக இருக்கும் என்றும் கூறியுள்ளார்.

ஒன்றிய அரசு மாநிலங்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில், ”கொரோனா தடுப்பூசி கையிருப்பு தொடர்பான தகவல்களை,மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகள்,பொதுத்தளங்களிலோ,வேறு எந்த நிறுவனத்துடனோ பகிரக்கூடாது. இது "சென்சிட்டிவ்" டேட்டா ஆகும். எனவே,அதை மத்திய அரசிடம் மட்டுமே தெரிவிக்க வேண்டும்.

ஏனெனில், ஐக்கிய மேம்பாட்டு திட்டத்தின் உதவியுடன் இந்தியாவில் தடுப்பூசிகளின் இருப்பு, அவை பாதுகாக்கப்படும் வெப்பநிலை போன்ற தகவல்களை "இ-வின்" என்ற தளத்தில் மத்திய அரசு சேமித்து வைத்துள்ளது. மத்திய அரசுக்குச் சொந்தமான "இ-வின்" மின்னணு அமைப்பில், கொரோனா தடுப்பூசி பற்றிய விவரங்களை மாநில அரசுகள் நாள்தோறும் பதிவேற்றம் செய்கின்றன.

இதில் பதிவு செய்யப்படும் தகவல்கள் மிகவும் முக்கியமானவை என்பதால், தடுப்பூசி திட்டத்தை மேம்படுத்த மட்டுமே அந்த தகவல்களை மாநிலங்கள் பயன்படுத்த வேண்டும். எனவே,"இ-வின்" மின்னணு அமைப்பில் உள்ள தகவல்களை மத்திய சுகாதாரத் துறை அமைச்சகத்தின் ஒப்புதலின்றி எந்த நிறுவனத்துடனும் ஊடகங்களுடனும் மாநில அரசுகள் பகிர்ந்து கொள்ளக் கூடாது, ஆன்லைனில் வெளியிடக் கூடாது" என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

மேலும் இதுகுறித்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறுகையில், ”தடுப்பூசி எண்ணிக்கையை பொதுத்தளத்தில் தெரிவிக்க கூடாது என்று மத்திய அரசின் சுகாதாரத்துறை கூறியுள்ளது. ஆனால் தடுப்பூசி கையிருப்பு குறித்து தெரிவிக்காமல் இருந்தால் மக்களுக்கு உண்மை நிலவரம் தெரியாமல் தடுப்பூசிக்காக மக்கள் வரிசையில் காத்திருந்து ஏமாறும் நிலை ஏற்படும்.

எனவே தடுப்பூசி குறித்து உண்மை நிலையை மக்களுக்கு சொல்வது தான் சிறந்தது. மேலும் தமிழகத்திற்கு இதுவரை 1,01,63,000 தடுப்பூசி டோஸ்கள் வந்துள்ளன. இதனால், 97,62,957 டோஸ்கள் போடப்பட்டுள்ளன. தமிழகத்தில் 36 மாவட்டங்களில் தடுப்பூசிகள் கையிருப்பு இல்லை" என்று கூறியுள்ளார்.