ஒமைக்ரான் பரிசோதனை முடிவுகள் மத்திய அரசிடம் இருந்து வருவதில் தாமதம் - அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்
இந்தியாவுக்கு முன்மாதிரியான பல்கலைக்கழகமாக சித்த மருத்துவ பல்கலைக்கழகம் இருக்கும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா பாதிப்பு வெகுவாக குறைந்து உள்ள நிலையில் தற்போது ஒமைக்ரான் தொற்று பரவ தொடங்கியுள்ளது.
தமிழகத்தில் இதுவரை 34 பேருக்கு ஒமிக்ரான் இருப்பது கண்டறியப்பட்டுள்ள நிலையில் , ஒமிக்ரானை தடுக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. அத்துடன் 15 வயதுக்கு மேற்பட்ட சிறார்களுக்கு பள்ளிகளில் தடுப்பூசி செலுத்தும் பணியும் வருகின்ற ஜனவரி 3ஆம் தேதி முதல் தொடங்கும் என தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
இந்நிலையில் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், "தமிழ்நாடு முழுவதும் இதுவரை 97 பேருக்கும் ஒமிக்ரான் அறிகுறி உள்ளது. தமிழ்நாட்டிலும் ஒமிக்ரானால் பாதிக்கப்பட்ட 34 பேரில் 16 பேர் மட்டுமே சிகிச்சை பெற்று வருகின்றனர். ஒமிக்ரான் பரிசோதனை முடிவுகள் மத்திய அரசிடம் இருந்து வருவது தாமதமாகிறது" என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், "முதல் மற்றும் 2வது கொரோனா அலையின்போது இயற்கை மருத்துவ முறையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி துறையின் புதிய தரவு அலகு தொடக்கம்; புதிய தரவு மையத்தின் மூலம் தமிழ்நாட்டு சித்த மருத்துவர்கள், இந்திய மருத்துவ துறையுடன் தொடர்பு கொள்ள முடியும்.
தமிழ்நாட்டில் அமையவுள்ள சித்த மருத்துவ பல்கலைக்கழகத்திற்கான இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதற்கான தொடக்க பணிகள் நடைபெற்று வருகிறது.
விரைவில் மக்கள் பயன்பாட்டுக்கு வரும் வகையில் இந்த பணிகள் முடிக்கப்படும். சித்த மருத்துவ பல்கலைக்கழகத்துக்கான அலுவலகத்தை 10 நாளில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைப்பார்; இந்தியாவுக்கு முன்மாதிரியான பல்கலைக்கழகமாக சித்த மருத்துவ பல்கலைக்கழகம் இருக்கும்" என்று தெரிவித்துள்ளார்.