தீபாவளி வாழ்த்து சொல்வதற்கு கூட முதலமைச்சருக்கு தயக்கமா? எல்.முருகன் கேள்வி

Minister MK Stalin CMO L. Murugan
By Thahir Nov 04, 2021 10:50 AM GMT
Report

'இடைத்தேர்தலில் காங்கிரஸ் எங்கும் ஜெயிக்கவில்லை, பாஜக தான் வெற்றி பெற்றுள்ளது' என்று தெரிவித்துள்ளார் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன்.

தமிழக பா.ஜ.க.வின் முன்னாள் தலைவரும், மத்திய இணை அமைச்சருமான எல்.முருகன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

அப்போது பேசிய அவர், ''தீபாவளி பரிசாக பெட்ரோல், டீசல் விலை குறைப்பை பிரதமர் மோடி அறிவித்துள்ளார். இதனால் விவசாயிகளும், பொதுமக்களும் மிகவும் பயனடைவார்கள்.

தமிழ்நாடு அரசு சொன்னதை செய்ய வேண்டும். பொதுமக்களுக்கு அளித்த வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் வாட் வரியை குறைக்க வேண்டும்.

அதன்மூலம் விலைவாசி குறையும். பெண்களுக்கு மாதம் ரூ. 1000 கொடுப்பதாக திமுக தேர்தல் வாக்குறுதி அளித்தது. ஆட்சி அமைத்து நான்கு மாதங்கள் ஆகி, தீபாவளியும் வந்துவிட்டது.

ஆனால் இன்னும் வழங்கப்படவில்லை. அரசு சத்தமே இல்லாமல் இருக்கிறது. தீபாவளி கொண்டாடும் அனைவருக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து சொல்ல வேண்டும். சொன்னாரா என்பது கேள்விக்குறியாக உள்ளது. அவருக்கு ஏன் அந்த தயக்கம் இருக்கிறது.

மற்ற பண்டிகைகளுக்கு வாழ்த்து சொல்வதுபோல இந்து பண்டிகைகளுக்கும் தெரிவிக்க வேண்டும். இடைத்தேர்தலில் காங்கிரஸ் எங்கும் ஜெயிக்கவில்லை.

பாஜக தான் முழுமையாக வென்றுள்ளது. யாரும் நிற்காத தொகுதிகளில் கூட பாஜக நின்று வென்றுள்ளது. இது பிரதமர் மோடிக்கு மக்கள் கொடுத்திருக்க கூடிய வெற்றி'' என்று அவர் தெரிவித்தார்.