அடுத்த 3 நாட்கள் கவனமாக இருங்கள் - சென்னை மக்களுக்கு அமைச்சர் எச்சரிக்கை

chennairains ministerkkssrramachandran TNGovernent chennaifloods
By Petchi Avudaiappan Nov 08, 2021 04:31 PM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in தமிழ்நாடு
Report

சென்னையில் மழை தொடர்ந்து பெய்வதால் மழைநீரை வெளியேற்றுவதில் சிக்கல் உள்ளதாக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார். 

சென்னை எழிலகத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில், 37 மாவட்டங்களில் மழை பெய்துள்ளது. மாநிலத்தின் சராசரி மழை அளவு 15.62 மி.மீட்டர். சென்னை மாவட்டத்தில் அதிகபட்சமாக 79.13 மி.மீட்டர் பதிவாகியுள்ளது. வடகிழக்கு பருவமழை 1.10.2021 முதல் 8.11.2021 வரை 347.62 மி.மீ பெய்துள்ளது. இது இயல்பான மழையளவான 241.2 மி.மீட்டரை விட 44% கூடுதல் ஆகும்.

 சென்னை மாநகராட்சி பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பெருநகர சென்னை மாநகராட்சி பகுதிகளில் மொத்தம் 169 நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டு, அதற்கான பொறுப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

சென்னை மாநகராட்சியின் 166 தெருக்களில் தேங்கியுள்ள மழை நீர், இராட்சத பம்புகள் மூலம் அகற்றப்பட்டு வருகிறது. மழை நீரால் சூழப்பட்டுள்ள 13 சுரங்கப்பாதைகளில், 10 சுரங்கப்பாதைகளில் மழை நீர் வெளியேற்றப்பட்டுள்ளது. எஞ்சிய 3 சுரங்கப்பாதைகளில் மழை நீர் வெளியேற்றும் பணி விரைவாக நடைபெற்று வருகிறது.

அடுத்த 3 நாட்கள் கவனமாக இருங்கள் - சென்னை மக்களுக்கு அமைச்சர் எச்சரிக்கை | Minister Kkssr Ramachandran Talks Rain Rescue Work

சென்னையில் மாநில அவசரக் கட்டுப்பாட்டு மையம், மாவட்டங்களில் மாவட்ட அவசரக் கட்டுப்பாட்டு மையங்களும் முறையே 1070 மற்றும் 1077 என்ற கட்டணமில்லா தொலைபேசியுடன், கூடுதலான அலுவலர்களுடன் 24 மணி நேரமும் இயங்கி வருகிறது. மேலும், பெருநகர சென்னை மாநகராட்சி தொடர்பான புகார்களுக்கு பொதுமக்கள் 1913 என்ற கட்டணமில்லா தொலைபேசி மூலம் தொடர்பு கொள்ளலாம்.

பொதுமக்கள் TNSMART இணையதளத்திலும், வாட்ஸ் அப் எண் 9445869848 மூலமாகவும் புகார்களை தெரிவிக்கலாம். முதல் நிலை மீட்பாளர்களை மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் ஈடுபடுத்தும் பொருட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர். கடலோர மாவட்டங்களில் 121 பல்நோக்கு பாதுகாப்பு மையங்களும், 5106 நிவாரண முகாம்களும் தயார் நிலையில் உள்ளன. 3915 மரம் அறுக்கும் இயந்திரங்கள், 2897 JCB கள், 2115 ஜெனரேட்டர்கள், 483 இராட்சத பம்புகள் உள்ளிட்ட தேடல் மற்றும் உபகரணங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.