பொதுமக்கள் வெளியே வரவேண்டாம் - அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் வேண்டுகோள்
பொதுமக்கள் தேவையில்லாமல் அடுத்த இரு தினங்களுக்கு வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சென்னையில் கடந்த சில நாட்களாக பெய்த கனமழை காரணமாக தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கி பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. அப்பகுதிகளில் வசிக்கும் மக்கள் நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
இவர்களுக்கு அம்மா உணவங்கள் மூலமும் உணவு தயாரித்து வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே முதல்வர் மு.க.ஸ்டாலின் மூன்றாவது நாளாக சென்னையில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரில் சென்று ஆய்வு செய்தார்.
இன்னும் இரு தினங்களுக்கு மழை இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்திருப்பதால் சென்னையில் வசிக்கும் மக்களிடையே அச்சம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் சென்னையின் மழை பாதிப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் செய்தியாளர்களை சந்தித்த போது, பொதுமக்கள் தங்கள் புகார்களை தெரிவிக்க சென்னை மக்கள் 1070 என்ற எண்ணிலும் வெளி மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் 1077 என்கிற எனினும் மாநில அவசர கட்டுப்பாட்டு மையத்திற்கு தொடர்புகொள்ளலாம்.
9445869843 என்கிற வாட்ஸ்அப் எண்ணிலும் பொதுமக்கள் தங்கள் புகார்களை பதிவு செய்யலாம் என கூறினார்.
மேலும் பேரிடர் காலங்களில் சமூக வலைத்தளங்களில் தவறான தகவல்களை பொதுமக்கள் பரப்ப வேண்டாம் என்றும், கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதால் சென்னையில் அடுத்த இரு தினங்களுக்கு பொதுமக்கள் வீட்டை விட்டு அனாவசியமாக வெளியே வரவேண்டாம் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.