மாநில பல்கலைக்கழகங்களை கைப்பற்ற மத்திய அரசு முயற்சிக்கிறது - அமைச்சர் கோவி.செழியன்

Tamil nadu Education University Grants Commission
By Karthikraja Jan 28, 2025 07:30 PM GMT
Report

 யூஜிசியின் வரைவு நெறிமுறைகளைத் தமிழ்நாடு அரசு ஒருபோதும் ஏற்காது என அமைச்சர் கோவி.செழியன் தெரிவித்துள்ளார்.

கோவி.செழியன்

சென்னை அண்ணா அறிவாலயத்தில் உயர் கல்வித் துறை அமைச்சர் கோவி.செழியன் செய்தியாளர்களை சந்தித்தார். 

minuister govi chezhian

அப்போது பேசிய அவர், "தமிழ்நாட்டில் உயர் கல்வி தேசிய சராசரியை விட நல்ல நிலையில் உள்ளது. அகில இந்திய அளவில் உயர்க் கல்வியில் இந்தியா 28 சதவீதமாக உள்ள நிலையில் தமிழ்நாடு 48 சதவீதம் பெற்றுள்ளது.

யூஜிசி வரைவு நெறிமுறை

இந்த நிலையில் பல்கலைக் கழக மானியக்குழு 06.01.2025 அன்று வரைவு ஒன்றை வெளியிட்டுள்ளது. இது முழுவதுமாக அரசியலமைப்பு சட்டத்திற்கு முரணாகவும், பல்கலைக்கழகங்களை உருவாக்கி நிர்ணயிக்கும் மாநில அரசின் உரிமைகளை பறிக்கக் கூடிய வகையில் அமைந்துள்ளது. 

அமைச்சர் கோவி.செழியன்

பல்கலைக்கழகம் உருவாக்கம், இடம், கட்டடம் கட்டுவது, ஊதியம் வழங்குவது என அனைத்தையும் செய்வது மாநில அரசு. ஆனால் துணைவேந்தர் நியமனத்தில் மட்டும் மாநில அரசிற்கு அதிகாரம் இல்லை என்று கூறியிருப்பது எவ்வளவு மோசமான சர்வாதிகாரப் போக்கு.

பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக நியமிக்கப்பதற்கு கல்வியாளர் மற்றும் கல்வித் தகுதி, அனுபவம், சிறப்பு தகுதிகள் உள்ளிட்டவைகளை கடந்து தொழிற்சாலை, பொதுத்துறை நிறுவனத்திலிருந்து வல்லுநர் என்ற வகையில் கல்வியாளர் அல்லாத நபர்களை துணைவேந்தராய் நியமிக்கும் ஆபத்தான முடிவுக்கு பரிந்துரைக்கிறது.

தீர்மானம்

வரைவு நெறிமுறை திருத்தங்களை ஏற்காவிட்டால், பல்கலைக்கழகங்கள் வழங்கிய பட்டங்கள் செல்லாது, யூஜிசி கூட்டங்களுக்கு அழைக்க மாட்டோம், யாரும் பங்கேற்க இயலாது, பல்கலைக்கழக சட்ட அங்கீகாரமும் செல்லாது என மிரட்டல் விடுத்து இருக்கின்றனர்.

இந்த சர்வாதிகாரப் போக்கைக் கண்டித்து, தமிழ்நாடு முதலமைச்சர் தமிழ்நாடு சட்டமன்றத்தில் இந்த வரைவு நெறிமுறைகளை உடனடியாகத் திரும்பபெற வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றி ஒன்றிய கல்வித் துறை அமைச்சருக்கு அனுப்பி வைத்துள்ளார். 

அமைச்சர் கோவி செழியன்

மேலும், இதற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற கோரி 9 மாநில முதல்வர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார். இந்த வரைவு நெறிமுறைகளை பல்வேறு மாநில முதல்வர்கள் கண்டித்துள்ளதோடு, கேரள மாநிலம் இந்த வரைவு நெறிமுறைகளை திரும்ப பெற வலியுறுத்தி கேரள சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.

மின்னஞ்சல் மூலம் கருத்து

கல்வி சார்ந்த உரிமைகள் அரசியலமைப்பின் ஒத்திசைவுப் பட்டியலில் உள்ள போது, மாநில அரசை கலந்தாலோசிக்காமல் வெளியிட்டுள்ள அறிவிப்பு அதிகார வரம்பை மீறியது ஆகும். ஒன்றிய அரசு கொண்டுவந்துள்ள இந்த வரைவு நெறிமுறைகளைத் தமிழ்நாடு அரசு ஒருபோதும் ஏற்காது. திரும்ப பெறும் வரை போராடும்.

5 .2.2025க்குள் இந்த விவகாரத்தில் கருத்துகளை சொல்ல வேண்டும் என யூஜிசி கேட்டுள்ள நிலையில், இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அனைவரும் பிப்ரவரி 5 ஆம் தேதிக்குள் புதிய நெறிமுறைகளைத் திரும்ப பெற வேண்டும் என draft-regulations@ugc.gov.in என்ற மின்னஞ்சல் முகவரிக்குக் கருத்துகளை அனுப்புமாறு கேட்டுக் கொள்கிறோம்" என கூறியுள்ளார்.