எழுவர் விடுதலை தொடர்பாக ஆளுநர் எந்த தகவலும் தரவில்லை: அமைச்சர் சி.வி.சண்முகம்
ஏழு பேர் விடுதலை குறித்து ஆளுநரிடமிருந்து எந்த தகவலும் அரசுக்கு நேரடியாக வரவில்லை என்ற சட்டத்துறை அமைச்சர் சி.வி. சண்முகம் தெரிவித்துள்ளார். பேரறிவாளன் உள்ளிட்ட எழுவரையும் விடுதலை செய்ய வேண்டும் என தமிழக அரசு நிறைவேற்றிய தீர்மானத்திற்கு இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக ஆளுநர் ஒப்புதல் தராமல் இருந்து வந்தார்.
இந்நிலையில் உச்சநீதிமன்றம் ஒரு வாரத்திற்குள்ளாக இந்த தீர்மானத்தின் மீது ஆளுநர் முடிவெடுக்க வேண்டும் என காலக்கெடு நிர்ணயித்திருந்தது. அந்த காலக்கெடுவும் முடிந்துள்ள நிலையில் உச்சநீதிமன்றத்தில் பதிலளித்துள்ள ஆளுநர் எழுவரையும் விடுவிக்க ஜனாதிபதிக்கே அதிகாரம் உள்ளது எனத் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய சட்டத்துறை அமைச்சர் சி.வி. சண்முகம், பேரறிவாளன் உள்பட 7 பேர் விடுதலை குறித்து ஆளுநர் பன்வரிலால் புரோகித்திடம் இருந்து எந்த தகவலும் அரசுக்கு வரவில்லை. உச்சநீதிமன்றத்தில் ஆளுநர் தாக்கல் செய்த ஆவணம் அரசுக்கு தந்தால் அதனை ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.