சென்னையில் கடல் மேல் வரும் பாலம் - சட்டமன்றத்தில் அமைச்சர் சொன்ன தகவல்
சென்னையில் கடல் மேல் பாலம் அமைப்பதற்கான திட்ட அறிக்கையை தயாரித்து வருவதாக அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கு பாலம்
கடந்த ஜனவரி 6 ஆம் தேதி முதல் சட்டப்பேரவை கூட்டம் நடைபெற்று வருகிறது. இதில் கேள்வி நேரத்தின் போது உறுப்பினர்களின் கேள்விகளுக்கு அமைச்சர்கள் பதில் அளித்து வருகின்றனர்.
இன்று நடைபெற கேள்வி நேரத்தின் போது, பேசிய துணை சபாநாயகர் பிச்சாண்டி, தனுஷ்கோடியில் இருந்து இலங்கை வரை பாலம் அமைக்க அரசு முன்வருமா என கேள்வி எழுப்பினார்.
இலங்கை நிராகரிப்பு
இதற்கு பதிலளித்த பொதுப்பணி துறை அமைச்சர் எ.வ.வேலு, "இலங்கையில் நிலவிய உள்நாட்டு போர் காரணமாக அந்த திட்டம் தற்போது வரை கனவுத் திட்டமாகவே உள்ளது.
கடந்த 2015 ஆம் ஆண்டு இந்தியா வந்த அப்போதைய இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கேவிடம் தனுஷ்கோடி முதல் தலைமன்னார் வரை சுரங்கப் பாலம் அமைக்க இந்தியா சார்பில் முன்மொழியப்பட்டதாகவும், ஆனால் இலங்கை அரசாங்கம் அதனை நிராகரித்துவிட்டதாகவும் பதிலளித்தார்.
இதனை தொடர்ந்து, மும்பையில் உள்ள அடல் சேது பாலம் போல சென்னையில் போக்குவரத்து நெரிசலை கடல் மேல் பாலம் அமைக்கப்படுமா என கேள்வி எழுப்பினார்.
சென்னை கடல் மேல் பாலம்
இதற்கு பதிலளித்த அமைச்சர் எ.வ.வேலு, முதற்கட்டமாக கலங்கரை விளக்கத்தில் இருந்து நீலாங்கரை வரையில் கடல் மேல் பாலம் அமைப்பதற்கான சாத்தியக்கூறுகள் ஆராயப்பட்டு வருகிறது. அதனை மத்திய அரசின் நிதி, மாநில அரசின் நிதி அல்லது தனியார் பங்களிப்புடன் செயல்படுத்துவதா என்பது குறித்து முடிவு செய்யப்படும்.
15 கிமீ நீளத்திற்கு பாலம் அமைப்பதற்கான திட்ட அறிக்கையை தயாரிக்கும் பணியில் பொறியாளர்கள் ஈடுபட்டுள்ளனர். முதலமைச்சருடன் கலந்து பேசி இதில் நல்ல முடிவு எடுக்கப்படும்" என கூறினார்.